இந்தியாவை 2வது டோஸ் தடுப்பூசிகளை வழங்குமாறு கட்டாயப்படுத்த மாட்டோம் : பூட்டான் பிரதமர்.!
By : Bharathi Latha
இந்தியாவில் கொரோனா 2வது அலையால் அதிகரித்து வரும் பாதிப்புகளால் தடுப்பூசிகளின் தேவை அதிக அளவில் இருந்து வருகிறது என்பதை அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்தியா தனது அண்டை நாடான பூடானுக்கு தடுப்பூசிகளை வழங்குமா? என்பது குறித்து பலருடைய கேள்விகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக பூட்டான் பிரதமர் அங்குள்ள ஒரு ஊடகத்தில் இதைப் பற்றி தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், "கடந்த காலங்களில் இந்தியா பூடானுக்கு மிகவும் உதவி செய்து இருக்கிறது. குறிப்பாக தடுப்பூசிகளையும் மருந்து பொருட்களையும் அளிக்கும் விதத்தில் மிகவும் சிறப்பாக உதவியது. ஆனால் இன்று இந்தியாவிற்கு ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டாக வேண்டிய நிலை. இதன் காரணமாக இந்தியா மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவது சற்று கடினமான விஷயம்தான். எனவே கொரோனா இரண்டாவது டோஸ்களையும் வழங்குமாறு இந்தியாவிடம் கட்டாயப் படுத்தப் போவதில்லை" என்று கூறினார்.
இந்தியா ஒரு நம்பகமான நண்பர், பூட்டான் கேட்டால் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளையும் கொடுக்கும். ஆனால் இந்தியாவில் தற்போது உள்நாட்டு தேவை அதிக அளவில் உள்ளதால், பூட்டான் அதற்கு அழுத்தம் கொடுக்காது. அஸ்ட்ராஜெனெகாவின் இரண்டாவது டோஸை பெற பூட்டான் மற்ற நாடுகளை அணுகும் என்று அவர் மேலும் கூறினார். இந்தியா ஏற்கனவே பூட்டானுக்கு சுமார் 5.5 லட்சம் தடுப்பூசி அளவை இரண்டு தொகுதிகளாக வழங்கியுள்ளது. மேலும், பூட்டானில் 80 சதவீத பெரியவர்களுக்கு முதல் டோஸ் மூலம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.