இன்னும் முடியவில்லை கொரோனாவின் 2வது அலை: மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை!

By : Bharathi Latha
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவல் சற்று குறைய தொடங்கியுள்ளது. இதனால் நாளொன்றுக்கு 4 லட்சத்தை தாண்டி பதிவான கொரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது 50 ஆயிரத்திற்கும் சற்று அதிகமாக காணப்படுகிறது. ஆனால் மக்கள் அனைவரும் எதிர்பார்த்தபடி இந்த வைரசின் தாக்கம் இன்னும் முடியவில்லை. கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடிவடையவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் அவர்கள் தற்பொழுது இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை பரவல் வேகம் குறைந்துள்ளதால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனினும், மராட்டியம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு தற்பொழுது வரை குறையாமல் இருந்து வருகிறது. இதற்கிடையே கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று மத்திய அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் உள்ள 75 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை இன்னும் 10 சதவீதத்திற்கு மேல் தான் உள்ளது. எனவே, தொற்று பரவல் அதிகரிக்கும் வகையிலான தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மக்கள் அனைவரும் தடுப்பூசி சேர்த்துக் கொள்வதை தங்களுடைய பாதுகாப்பின் ஒரு செயலாக எண்ண வேண்டும் என்று அரசின் சார்பாக கூறப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் மற்றும் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் சேர்வதை தவிர்க்க வேண்டும் என்றும், முக கவசம் அணிவதை கட்டாயம் உறுதி செய்யவும், சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்பது போன்ற பல நடவடிக்கைகள் மக்கள் பின்பற்றுவதன் மூலம் தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.
