இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான ஒமிக்ரான் தடுப்பூசி: 2 ஆண்டுகள் போராடி அசத்தியது இந்தியா!
By : Kathir Webdesk
உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒமிக்ரான்-நுண்கிருமிக்கென்று எம்ஆர்என்ஏ அடிப்படையிலான முன்னெச்சரிக்கை தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உயிரி தொழில்நுட்பத்துறை அறிவித்துள்ளது.
கொவிட் சுரக்ஷா இயக்கத்தின் ஆதரவுடன் ஜென்னோவா உயிரிமருந்துகள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசியை உயிரி தொழில்நுட்ப தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சில் அமலுக்கு கொண்டுவந்துள்ளது. இதன் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமை அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.
உயிரி தொழில்நுட்பத் துறையின் முயற்சிகளைப் பாராட்டியுள்ள மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், உள்நாட்டிலேயே எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பதன் மூலம் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் தொழில்துறைக்கு உகந்த தனது திட்டத்தை அறிவியல் தொழில்நுட்பத்துறை மீண்டும் செயல்படுத்தியிருப்பது குறித்து தாம் மிகவும் பெருமை கொள்வதாக தெரிவித்தார்.
பிரதமரின் தற்சார்பு இந்தியா கண்ணோட்டத்திற்கு இணங்க எதிர்காலத்திற்கு தயாரான தொழில்நுட்பம் உருவாக்கப்படுவதற்கு தாம் எப்போதுமே ஆதரவு அளித்திருப்பதாக அவர் கூறினார். இந்த தடுப்பூசியை இருப்புவைக்கவும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்லவும், தற்போதுள்ள 2 முதல் 8 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பத்தை விட குறைந்த வெப்பம் தேவைப்படாது என்றும் அவர் கூறினார்.
ஜென்னோவா உயிரிமருந்துகள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சஞ்சய் சிங் கூறுகையில், நாட்டின் முதலாவது எம்ஆர்என்ஏ தடுப்பூசியை உருவாக்க கடந்த 2 ஆண்டுகளாக தங்கள் நிறுவனத்தின் குழுவினர் அயராது பாடுபட்டது குறித்து தாம் பெருமை கொள்வதாக தெரிவித்தார்.
மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழுவின் வழிகாட்டுதலும், இந்தத் திட்டத்தைக் கண்காணித்த உயிரி தொழில்நுட்ப தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் தடுப்பூசி நிபுணர் குழுவின் வழிகாட்டுதலும் இல்லாமல் இது சாத்தியமில்லை என்று அவர் கூறினார்.
Input From: NewsOnair