ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 25 பினாகா ராக்கெட்டுகள் - இந்தியா எட்டிய மைல்கல்!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 122mm Caliber Rocket மற்றும் மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் ஆகியவற்றை, ஒடிசா கடற்கரைக்கு அருகில் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில் அமைந்துள்ள Multi-Barrel Rocket Launcher (MBRL) வசதியில் இருந்து டிஆர்டிஓ, ஜூன் 24 மற்றும் 25 அன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.
நான்கு 122mm Caliber ராக்கெட்டுகள் அவற்றின் முழு சக்தியுடன் ஏவப்பட்ட நிலையில், இலக்குகளை அவை முழுமையாக எட்டின. ராணுவ பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட்டுகள் 40 கி.மீ வரை இலக்குகளை தாக்கி அழிக்கும்.
25மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு இலக்குகளை நோக்கி ஏவப்பட்டன. அனைத்து இலக்குகளையும் அவை வெற்றிகரமாக எட்டின. இந்த வகை ராக்கெட்டுகள் 45 கி.மீ வரை இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.
புனேவில் உள்ள Armament Research and Development Establishment (ARDE) மற்றும் High Energy Materials Research Laboratory (HEMRL) ஆகியவை இணைந்து M/s Economic Explosives Limited, நாக்பூர், உதவியுடன் இவற்றை தயாரித்துள்ளன.