ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் மூலம் 250 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு - ரயில்வே தகவல்!
By : Shiva
இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரயில்கள் மூலம் மருத்துவ ஆக்ஸிஜன் பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
இதன் மூலம் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு திரவ மருத்துவ ஆக்சிஜனை கொண்டு சேர்க்கும் பணியை துரிதப்படுத்தி உள்ள இந்திய ரயில்வே இதுவரை 813 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 56 டேங்கர்களில் கொண்டு சேர்த்துள்ளது. டெல்லி தெலுங்கானா உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு 250 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை நாளை காலை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டு சேர்க்கின்றன.
இரண்டாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸில் மூலம் 120 மெட்ரிக் டன் அளவு மருத்துவ ஆக்சிஜன் நாளை மாலைக்குள் டெல்லி சேர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ஹரியானாவுக்கு 79 டன் மருத்துவ ஆக்சிஜன் இன்று சென்று சேர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு எவ்வளவு விரைவாக ஆக்சிஜன் அனுப்ப முடியுமோ அவ்வளவு விரைவாக அனுப்புவதே இந்திய ரயில்வே துறையின் லட்சியமாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக இந்திய விமானப்படை மற்றும் இந்திய கப்பற்படையை சேர்ந்தவர்கள் இந்தப் பேரிடர் காலத்தில் மக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்று அறிந்து அவ்வாறு சேவை செய்து வருகின்றனர். அனைவரும் ஒன்று கூடி இந்த வைரசுக்கு போராடி வரும் நிலையில் மத்திய அரசை குறை கூற வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர்கள் அவதூறு பரப்பி வருகின்றனர். இந்த பேரிடர் காலத்தில் தங்களால் உதவி செய்ய இயலவில்லை என்றாலும் இவ்வாறு அவதூறு பரப்பாமல் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.