பயாலஜிக்கல் - இ நிறுவனத்திடம் இருந்து 30 கோடி தடுப்பூசிகள் பெற மத்திய அரசு திட்டம்!
By : Shiva
ஆத்மநிர்பார் பாரத் 3.0 திட்டத்தின்ன் ஒரு பகுதியாக கொவிட்-19 தடுப்பூசியின் தயாரிப்பை அதிகரிக்கும் நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட கொவிட் சுரக்ஷா திட்டத்தின் கீழ் ஹைதராபாத்தில் இயங்கி வரும் பயாலஜிக்கல்-இ என்ற கொரோனா தடுப்பூசி நிறுவனத்திடமிருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் 30 கோடி தடுப்பூசிகளை வாங்குவதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியை இரண்டு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் தடுப்பூசி மேம்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட கோவிட் சுரக்ஷா என்ற திட்டத்தின் கீழ் தடுப்பூசிகளை இந்தியாவிலேயே தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஹைதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல்-இ என்ற நிறுவனம் கொரொனா தடுப்பூசி தயாரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகள் வெற்றி அடைந்ததை அடுத்து, பயாலஜிக்கல்-இ நிறுவனம் தயாரிக்கும் கொவிட்-19 தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த சில மாதங்களில் இந்தத் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்த நிறுவனத்திடம் இருந்து 30 கோடி தடுப்பூசிகளை இந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் உற்பத்திசெய்து வழங்குவதற்காக மத்திய அரசு ₹1500 கோடி ரூபாயை முன்பணமாக அளிக்க உள்ளது.
பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் திட்ட முன்மொழிவை கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு முறையாக ஆய்வு செய்து அதன் ஒப்புதலுக்கு பரிந்துரை செய்துள்ளது. உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக நிதி உதவ செய்து ஆதரவளித்து, அவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பயாலஜிக்கல்-இ நிறுவனத்துடனான இந்திய அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.