இதுவரை 30,182 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை மாநிலங்களுக்கு வழங்கிய மத்திய அரசு!
By : Parthasarathy
கொரோனா காலத்தில் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தேவை மிகவும் அதிகமாக இருந்த நிலையில், மத்திய அரசு சரியான நேரத்தில் அவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை ரயில்கள் மூலம் விநியோகித்தது. தற்போது ஆக்ஸிகனுக்கான தட்டுப்பாடு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மத்திய அரசு ஆக்ஸிஜன் வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்திற்கு இது வரை 4,941 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "நாடு முழுவதும் திரவ மருத்துவ ஆக்சிஜனை, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் இந்திய ரயில்வே வினியோகித்து வருகிறது. இதுவரை, 421 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1,734 டேங்கர்களில் 30,182 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தென் மாநிலங்களுக்கு 15,000 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் வினியோகிக்கப்பட்டு உள்ளன.
இதுவரை தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு 4,941, 3,600 மற்றும் 3,700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 10 டேங்கர்களில் 177 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் 2 ரயில்கள் பயணம் செய்து வருகின்றன. கூடுதலாக சில ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று தங்களது பயணத்தைத் துவங்க உள்ளன." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.