ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு - கூடுதலாக 3.5 லட்சம் டோஸ்களை அனுப்பிய மத்திய அரசு!
By : Shiva
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் அவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு அவற்றின் இருப்பை உறுதி செய்யவும், மே 23 வரை மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரெம்டெசிவிர் மருந்துகள் பற்றிய தகவல்களை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் சதானந்த கவுடா இன்று வெளியிட்டார்.
தேவைகள் அதிகரித்து அதன் காரணமாக ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தி மற்றும் ஒதுக்கீடு கணிசமாக அதிகரித்திருப்பதாகவும் இதனால் ஏப்ரல் 21- மே 23 வரையிலான காலகட்டத்தில் தமிழகத்திற்கு 3,50,000, புதுச்சேரிக்கு 22,000 குப்பிகள் உட்பட 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் 76 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று அரசு சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்படும் மருந்துகளின் விநியோகத்தை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக பொதுமக்கள் அரசை தொல்லை செய்வதாக சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட பின்னர் செலுத்தப்படும் இந்த மருந்து தண்ணீருக்கு சமம் என்று அமைச்சர் கூறியிருந்தார். இதனால் ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி தங்களது சொந்தங்களை எப்படியாவது காப்பாற்றி விட முடியும் என்று மணிக் கணக்கில் சென்னை நேரு ஸ்டேடியம் முன்பு நம்பிக்கையுடன் காத்திருக்கும் பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் விதமாக உள்ளது என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.