தொடர்ந்து பொய்யை பரப்பும் எதிர்க்கட்சிகள்: பா.ஜ.க வின் 41 ஆவது தொடக்க நாளில் பிரதமர் உரை!

By : Bharathi Latha
பா.ஜ.க வின் 41வது தொடக்க தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள பாரதிய ஜனதா தொண்டர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவும் கலந்து கொண்ட இந்த கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் காலை 10:30 மணி முதல் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
அப்போது பேசிய மோடி, CAA, விவசாய சட்டங்கள் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் குறித்து வதந்திகளை பரப்பியதற்காக எதிர்க்கட்சிகளை கண்டித்தார். பா.ஜ.க வின் 41வது தொடக்க தினத்தை முன்னிட்டு கட்சித் தொண்டர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, நாட்டில் அரசியல் ஸ்திரமின்மையை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று கூறினார்.
"இன்று, வதந்திகள் பரப்பப்படுகின்றன. சில நேரங்களில் CAA, சில நேரங்களில் விவசாய சட்டங்கள், சில நேரங்களில் தொழிலாளர் சட்டம். ஒவ்வொரு பா.ஜ.க தொண்டரும் இதன் பின்னால் ஒரு மோசமான எண்ணம் கொண்ட அரசியல் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு பெரிய சதி. நாட்டில் அரசியல் ஸ்திரமின்மையை உருவாக்குவதே இதன் நோக்கம். எனவே, நாட்டில் பல்வேறு வதந்திகள் பரவுகின்றன, குழப்பங்கள் பரவுகின்றன. சில சமயங்களில் அரசியலமைப்பு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. இடஒதுக்கீடு ஒழிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இவை அனைத்தும் பொய்கள்" பிரதமர் மேலும் கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியானது 1951 ஆம் ஆண்டில் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களால் பாரதீய ஜனசங்கமாக நிறுவப்பட்டது. பின்னர் இது 1977 இல் இந்திரா காந்தியின் அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்த பல கட்சிகளுடன் இணைக்கப்பட்டு ஜனதா கட்சியாக உருவானது.
இதன் விளைவாக, முன்னாள் பாரதீய ஜனசங்க உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி ஒரு புதிய அரசியல் கட்சியை தொடங்கினர். இவ்வாறு, ஏப்ரல் 6, 1980 இல் பா.ஜ.க தொடங்கப்பட்டது. பா.ஜ.கவின் 41வது தொடக்க தினம் நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தல் நாளுடன் ஒத்துப்போவது முக்கியத்துவம் பெறுகிறது.
இதில் அசாமில் தற்போது நடக்கும் பா.ஜ.க ஆட்சியே தொடரும் எனக் கூறப்படும் நிலையில், மேற்குவங்கத்தில் ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கபப்டுகிறது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் தனது நிலையை வலுப்படுத்த முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.
