பிரதமரின் அறக்கட்டளையின் கீழ் மூன்று மாதங்களில் 500 மருத்துவ பிராணவாயு ஆலைகள் - டிஆர்டிஓவின் முன்முயற்சி!

டிஆர்டிஓ-வின் ராணுவ உயிரி பொறியியல் மற்றும் மின்னணு மருத்துவ ஆய்வகம் (டிஇபிஇஎல்), தேஜஸ் என்ற இலகு ரக விமானத்தில் பயன்படுத்தப்படுத்துவதற்காக உருவாக்கிய மருத்துவ பிராணவாயு தொழில்நுட்பம், கொவிட்-19 நோயாளிகளுக்கு பயனளிக்கவிருக்கிறது.
இந்த எரிவாயு தொழில்நுட்பம், ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் கொள்ளவைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நிமிடத்திற்கு 5 லிட்டர் என்ற வீதத்தில் நாளொன்றுக்கு 195 சிலிண்டர்களின் மின்னூட்டத்துடன் 190 நோயாளிகளுக்கு இந்தத் திட்டம் பயனளிக்கும்.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெங்களூருவில் உள்ள டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம் நிறுவனமும், கோயம்பத்தூரில் உள்ள டிரைடன்ட் நியூமாடிக்ஸ் தனியார் நிறுவனமும் 380 ஆலைகளை நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நிறுவும்.
அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மன்றத்திற்கு (சிஎஸ்ஐஆர்) சொந்தமான டேராடூனில் உள்ள இந்திய பெட்ரோலிய கழகத்துடன் இணைந்து நிமிடத்திற்கு 500 லிட்டர் திறன் கொண்ட 120 ஆலைகளை தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும்.
பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணம் (பிஎம் கேர்ஸ்) நிதி அறக்கட்டளையின் கீழ் மாதத்திற்கு 125 ஆலைகள் நிறுவப்படும்.
இதன் மூலம் மூன்று மாதங்களில் 500 மருத்துவ பிராணவாயு ஆலைகள் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம் நிறுவனம் 332 மருத்துவ பிராணவாயு ஆலைகளையும், கோயம்பத்தூரின் டிரைடன்ட் நியூமாடிக்ஸ் தனியார் நிறுவனம் 48 ஆலைகளையும் அமைக்க டிஆர்டிஓ முடிவு செய்துள்ளது.