'தாமாதமாக மனு தாக்கல் செய்ததால் மம்தா பானர்ஜிக்கு 5,000 ரூபாய் அபராதம்' : நீதிமன்றம் அதிரடி!
By : Parthasarathy
"நாரதா" என்ற இணைய இதழ், ஊழல் தொடர்பான வழக்கை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில் திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்களை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் தங்களுடைய தரப்பையும் விசாரிக்க வேண்டி மம்தா பானர்ஜி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் மனுவை தாமதமாக தாக்கல் செய்ததற்காக கொல்கத்தா உயர் நீதிமன்றம் மம்தா பானர்ஜி மீது 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது .
மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுபேற்றார். நாரதா என்ற இணைய இதழ் வெளிப்படுத்திய ஊழல் தொடர்பான வழக்கில் திரிணமுல் காங்கிரஸை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் உட்பட நான்கு பேரை சி.பி.ஐ., அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர்.
இதனை எதிர்த்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் சி.பி.ஐ. அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நாரதா வழக்கின் விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சி.பி.ஐ. தரப்பில், கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தங்களுடைய தரப்பையும் விசாரிக்கக் கோரி, மம்தா பானர்ஜி மற்றும் சட்ட அமைச்சர் மோலாய் காடக் மனு தாக்கல் செய்தனர். ஆனால், காலதாமதமாக தாக்கல் செய்ததால், அவற்றை ஏற்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி மற்றும் காடக் மேல்முறையீடு செய்தனர். அவர்களுடைய மனுக்களை விசாரணைக்கு ஏற்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அவர்கள் மீண்டும் புதிய மனுவை தாக்கல் செய்தனர். அதை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அதே நேரத்தில், காலதாமதமாக மனு தாக்கல் செய்ததற்காக, மம்தா பானர்ஜிக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.