இளம் எழுத்தாளர்களை உருவாக்க மத்திய அரசு முயற்சி - மாதம் ₹50,000 ஊக்கத்தொகை.!
By : Yendhizhai Krishnan
நாட்டில் சுதந்திர போராட்டம் குறித்து இளைஞர்கள் அதிக கட்டுரைகள் எழுத வேண்டும் என்று இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக மத்திய கல்வி அமைச்சகம் பிரதமரின் யுவா திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி மன் கீ பாத் நிகழ்ச்சியில் உரையாடும்போது சுதந்திரப் போராட்டம் குறித்தும் அப்போது நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தும் இளைஞர்கள் அதிகம் எழுத வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்தத் திட்டத்தின் மூலம் 30 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து அவர்களை சிறந்த எழுத்தாளர்களாக உருவாக்குவதற்காக மத்திய கல்வி அமைச்சகம் பிரதமரின் யுவா திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்கள் தேசிய இயக்கம், நாம் பெரிதும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகள், சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட இடங்கள் போன்ற கருப்பொருள்களில் எழுத ஆர்வமுள்ளவர்கள் mygov.in இல் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை திறந்திருக்கும். இந்த போட்டியில் மொத்தம் 75 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த போட்டியில் வெற்றி பெறும் வெற்றியாளர்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள். மேலும் வெற்றி பெற்றவர்களின் கட்டுரைகள் 2021 டிசம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியிடத் தயாராக இருக்கும். இந்த புத்தகங்கள் தேசிய இளைஞர் தினத்தில் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும். வெற்றி பெற்ற இளம் எழுத்தாளர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு மாதம் ₹ 50,000 உதவித்தொகையும் கிடைக்கும். அவர்களது புத்தகங்கள் தேசிய புத்தக அறக்கட்டளையால் பதிப்பிக்கப்படும்.