உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் - பிரதமரின் அசத்தல் பிளான்!
By : Kathir Webdesk
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். இந்தியாவில் உற்பத்தி, உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு, உள்ளூர் பொருட்களை உலக அளவில் கொண்டு செல்லுதல் போன்ற இயக்கங்கள் புதிய வேலைவாய்ப்புகளையும், சுயவேலை வாய்ப்புகளையும் உருவாக்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
"அரசு மற்றும் தனியார் துறையில் புதிய வேலைகளுக்கான சாத்தியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் இளைஞர்களின் சொந்த நகரங்களிலும், கிராமங்களிலும் இத்தகைய வாய்ப்புகள் உருவாகி வருவது முக்கியமானது. இது இளைஞர்கள் புலம் பெயரும் நிர்ப்பந்தத்தை குறைத்துள்ளது. மேலும் தங்கள் பகுதியில் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பை செய்ய முடிந்துள்ளது" என்று அவர் கூறினார்.
ஸ்டார்ட் அப் தொடங்கி சுயவேலைவாய்ப்பு வரை, விண்வெளி முதல் ட்ரோன் வரையிலான துறைகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதை பிரதமர் எடுத்துரைத்தார். இளைஞர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை 80,000 ஸ்டார்ட் அப்கள் வழங்கியுள்ளன.
மருத்துவம், பூச்சி மருந்து தெளித்தல், ஸ்வமித்வா திட்டத்தில் வரைபடம் தயாரித்தல், பாதுகாப்புத்துறை ஆகியவற்றில் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது என்று அவர் கூறினார்.
ஒரு சில நாட்களுக்கு முன் இந்தியாவில் தனியார் துறை மூலம் முதலாவது ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், விண்வெளித்துறையை தனியாருக்கு திறக்கும் முடிவை பாராட்டியதோடு, இந்திய இளைஞர்களுக்கு இது வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றார். இதுவரை அனுமதிக்கப்பட்ட 35 கோடிக்கும் அதிகமான முத்ரா கடன்களை உதாரணமாகவும் அவர் எடுத்துரைத்தார்.
Input from: Gov.in