இந்திய விமானப் போக்குவரத்தின் 75-வது ஆண்டு பயணம்.. இன்னும் நிறைய சாதனை படைக்க உள்ள இந்தியா..
By : Bharathi Latha
2047-ம் ஆண்டில் வான்வெளி மற்றும் விமானப் போக்குவரத்து என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு. இந்திய விமானவியல் சங்கத்தின் 75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதுதில்லியில் தொடங்கிய 2047-ம் ஆண்டில் வான்வெளி மற்றும் விமானப் போக்குவரத்து என்ற சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், 1948-ம் ஆண்டு தொடங்கப் பட்ட இந்திய விமானவியல் சங்கம் அன்று முதல் இன்று வரை, ஒரு அறிவுசார் அமைப்பாக தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது என்றார்.
வானூர்தியியல் மற்றும் விமானப் பொறியியல் அறிவை மேம் படுத்துவதற்கும் அதை பரவலாகச் சென்றடையச் செய்வதற்கும் இந்த சங்கம் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளதாக அவர் பாராட்டுத் தெரிவித்தார். வானில் பறக்கும் கற்பனை சக்தியை யதார்த்தத்திற்கு கொண்டு வரக் கூடிய மனித அறிவாற்றலின் குறிப்பிடத்தக்க சாதனை விமானப் போக்குவரத்து என்று குடியரசுத்தலைவர் கூறினார். இந்திய விமானவியல் சங்கத்தின் 75 ஆண்டுகாலப் பயணத்தை நாம் கொண்டாடும் இந்த நேரத்தில், விமானப் போக்குவரத்து, விண்வெளித் தொழில்நுட்பம், ஏவுகணை தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நமது தேசம் மிகப் பெரிய சாதனைகளை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மங்கள்யானின் செவ்வாய் கிரக ஆய்வுப் பயணம், நிலவின் தென்துருவத்திற்கு அருகில் பாதுகாப்பாக தரையிறங்கிய சந்திரயான் சாதனை என பலவற்றின் மூலம் இந்தியா தமது திறனை நிரூபித்துள்ளது என்று அவர் கூறினார். தரம், குறைந்த செலவு, நிறைந்த செயல்திறன் மற்றும் நேரம் தவறாமை ஆகியவை நமது அனைத்து திட்டங்களின் அடையாளங்களாகும் என்று அவர் கூறினார்.
நாம் நீண்ட முன்னேற்றங்களை அடைந்துள்ள போதிலும், பல சவால்கள் உள்ளன என்றும் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். வான்வழிப் போக்குவரத்தில் உள்ள பிரச்சினைகளை சரியான முறையில் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அதற்கான திறன்களை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். மனித வளத்தை நன்கு மேம்படுத்த வேண்டிய பணியும் உள்ளது என்று கூறிய அவர் தற்போதைய பணியாளர்களின் திறனை மேம்படுத்துதலும் அவசியம் என்றார்.
Input & Image courtesy: News