கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு 75 லட்சம் மாடர்னா தடுப்பூசி - WHO தகவல்!

By : Bharathi Latha
தற்போது உள்ள சூழ்நிலையில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி என்பதை உலக சுகாதார நிறுவனத்தின் ஒரே எண்ணமாக இருந்து வருகின்றது. இந்த எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி நிறுவனங்கள் தங்களுடைய தடுப்பூசிகளை அண்டை நாடுகளுக்கு வழங்க முன்வந்துள்ளன. எனவே WHO கோவாக்ஸ் திட்டத்தின்கீழ், பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு விரைவில் 75 லட்சம் டோஸ்கள் மாடர்னா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர் மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் கூறுகையில், "உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு விரைவில் 75 லட்சம் டோஸ் மாடர்னா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது" என்று அவர் தெரிவித்தார். ஆனால் அந்த தடுப்பூசிகள் எப்போது வழங்கப்படும் என்பது குறி்த்து அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசின் அனுமதியைப் பொறுத்து தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் நிதிஆயோக்கின் சுகதாார உறுப்பினர் V. K.பால் இதுகுறித்து கூறுகையில், "மாடர்னா மற்றும் பைஸர் தடுப்பூசி நிறுவனங்களிடம் மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது. அந்த நிறுவனங்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். விரைவில் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கும்" என்று தெரிவித்திருந்தார். மேலும் கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "அவசரகால பயன்பாட்டுக்காக இந்தியாவில் மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய இந்திய அரசு அனுமதியளித்துள்ளது" என்று தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
