கடந்த 9 ஆண்டுகளில் வாரந்தோறும் ஒரு பல்கலைக்கழகம் - இதுவரை அரசுகள் படைக்காத சாதனை!
By : Kathir Webdesk
2023-ம் ஆண்டின் இளைஞர்கள் 2047-ம் ஆண்டுக்கான இந்தியாவை வடிவமைப்பார்கள் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த போது, நம்பிக்கையற்ற சூழலை நாடு எதிர்கொண்டு இருந்த நிலையில், ஏழைகளின் மேம்பாட்டுக்காகவும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், இளைஞர்களின் முன்னேற்றத்திற்காகவும், அர்ப்பணிக்கும் அரசாக தமது அரசு இருக்கும் என மோடி குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார்.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி மோடி தலைமையிலான மத்திய அரசு பீடு நடை போடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தப்படி, ரோஸ்கார் மேளா எனப்படும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை மத்திய அரசு வழங்கி வருவதையும் திரு ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2014-ம் ஆண்டு 400-ஆக இருந்த ஸ்டார்ட் அப் இந்தியா நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 75 ஆயிரமாக அதிகரித்திருப்பதாகவும், இதன் மூலம் உலக அளவிலான ஸ்டார்ட் அப் சூழல் தரவரிசையில் இந்தியாவுக்கு மூன்றாம் இடம் கிடைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
கல்வித்துறையில் மாபெரும் முன்னேற்றத்தை மோடி அரசு உருவாக்கியிருப்பதை நினைவு கூர்ந்த அவர், 2014-ம் ஆண்டு 725 –ஆக இருந்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை தற்போது 1000-த்தை தாண்டியிருப்பதாகவும், கடந்த 9 ஆண்டுகளில் வாரந்தோறும் ஒரு பல்கலைக்கழகம் வீதம் அமைக்கப்பட்டு இருப்பதையும் குறிப்பிட்டார்.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 260-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு இருப்பதையும் அமைச்சர் தெரிவித்தார்.
Input From: NewsONAir