தடுப்பூசி தொடர்பான பயம் வேண்டாம் - AEFI விளக்கம்!
By : Shiva
கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின்னர் இரத்தப் போக்கு மற்றும் இரத்தம் உறைதல் போன்ற சம்பவங்கள் ஏற்படுவது இந்தியாவில் மிகவும் குறைவு என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் எதிர்ப்பு மருந்துக்குப்பின் ஏற்படும் பாதக விளைவை ஆராயும் தேசியக் குழு (AEFI) அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட பிறகு ரத்த நாளத்தில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படுவதாக சில நாடுகளில் கடந்த மார்ச் 11ம் தேதி எச்சரிக்கை விடுக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து இந்தியாவில் இதைப்பற்றி ஆராய முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு மோசமான பாதிப்புகள் ஏற்பட்ட 498 பேரின் மருத்துவ அறிக்கையை ஏஇஎப்ஐ குழு விரிவாக ஆய்வு செய்து முடித்துள்ளது. அவ்வாறு ஆய்வு செய்ததில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்ட 26 பேருக்கு மட்டுமே ரத்தம் உறைதல் மற்றும் ரத்தப்போக்கு மூலம் பாதிப்பு ஏற்பட்டு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது பத்து லட்சம் பேருக்கு 0.61 என்ற அளவில் உள்ளது. கோவாக்சின் தடுப்பூசி போட்டபின்பு இரத்தம் உறைதல் சம்பவம் நடந்ததாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இங்கிலாந்தில் 10 லட்சம் பேருக்கு நான்கு பேருக்கும், ஜெர்மனியில் 10 பேருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் பத்து லட்சம் பேருக்கு 0.61 என்ற அளவில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இறப்பு சதவிகிதம் இந்தியாவில் குறைவு என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த தகவல்கள் அனைத்தையும் மத்திய அமைச்சகம் தனது செய்திக் குறிப்பில் விரைவாக வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகும் நோய் தொற்று பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்