கொரோனா: வாய்வழியாக பயன்படுத்தும் தடுப்பு மருந்தை உருவாக்க ஆராய்ச்சி - ICMR அறிக்கை சமர்ப்பணம்!
By : Parthasarathy
தற்போது இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக, இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. கொரோனா தடுப்பூசிகளை 18 வயது மேற்பட்டவர்கள் மட்டும் செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சொட்டு மருந்து மூலம் கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவது குறித்தது பரிசீலித்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில் கொரோனாவிற்கு வாய்வழியாக பயன்படுத்தும் தடுப்பு மருந்தை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி செய்ய கொல்கத்தாவில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) - தேசிய காலரா மற்றும் குடல் நோய்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயரிய தொழில்நுட்ப துறையிடம் அதற்க்கான திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இது குறித்து I.C.M.R -தேசிய காலரா மற்றும் குடல் நோய்கள் நிறுவனத்தின் இயக்குனர் சாந்தா தத்தா கூறியதாவது "ஜெர்மனியை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். இந்த ஆராய்ச்சிக்கான ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கியவுடன் பணி தொடங்கப்படும். மற்ற தடுப்பு மருந்துகளை போலவே, பல கட்ட ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகள் நடத்தப்படும்.
அனைத்து தடுப்பு மருந்துகளுக்கு நடப்பது போல், இந்த வாய்வழியாக பயன்படுத்தும் தடுப்பு மருந்தும் முதலில் விலங்குகளிடம் சோதனை செய்யப்படும். இந்த எல்லா பணிகளையும் முடிக்க 5 அல்லது 6 ஆண்டுகள் ஆகி விடும். அதன்பிறகுதான் இந்த வாய்வழியாக பயன்படுத்தும் தடுப்பு மருந்து சந்தைக்கு வரும்." என்று அவர் கூறினார்.