டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி - நிதி ஆயோக் (NITI Aayog) தகவல்!
By : Shiva
இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். தடுப்பூசி அதிகம் செலுத்தி கொண்ட நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதுவரை 18 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதேபோல் அமெரிக்காவில் இதுவரை 26 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் உலக நாடுகளில் சீனா மற்றும் அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவில் அதிக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதத்திற்குள் 216 கோடி தடுப்பூசிகள் தயார் செய்து முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்களை தடுப்பூசி போடுவதன் மூலம் பாதுகாத்து உள்ளோம் என்று அவர் தெரிவித்தார். கொரோனா நோய்த் தொற்றினால் இறந்தவர்களில் 88 சதவிகித மக்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்
தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் நாட்டு மக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வரும் நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் இந்தியா வந்து சேர்ந்துள்ளதாகவும், ரஷ்யாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகள் அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வரும் என நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
தற்போது இந்தியாவில் 187 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து குறைந்து வருவதாகவும் இதுவரை நாடு முழுவதும் 17.72 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.