குடியரசுத் தலைவரை உருவக் கேலி செய்த மேற்கு வங்க அமைச்சர்: உடனடியாக தூக்கச் சொல்லும் பா.ஜ.க!
By : Kathir Webdesk
நிறத்தை வைத்து உருவக் கேலி
மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் நிறத்தை வைத்து உருவக் கேலி செய்தார். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடியரசுத் தலைவரை உருவக் கேலி செய்த அமைச்சரின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அர்ஜூன் முண்டா கருத்து
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும், மத்திய பழங்குடியின அமைச்சருமான அர்ஜூன் முண்டா, அகில் கிரியின் பேச்சு கடும் கண்டனத்திற்கு உரியது. முதல்வர் மம்தா பானர்ஜி, அவரை தனது அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். அவர் இவ்வாறு பேசியதற்காக நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
மேற்கு வங்க முதல்வர் ஒரு பெண். அவரது அமைச்சரவையில் உள்ள ஒருவர், பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவரை வெறுக்கத்தக்க வகையில் பேசி இருக்கிறார். இதை அனுமதிக்க முடியாது. பழங்குடியின பெண் ஒருவர் குடியரசுத் தலைவராக ஆகி இருப்பதை திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையே அகில் கிரியின் பேச்சு காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநருக்கு கடிதம்
இதனிடையே, மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரி, ஆளுநர் இல.கணேசனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மேற்கு வங்க அமைச்சர் பதவியில் இருந்து அகில் கிரியை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அகில் கிரியின் பேச்சு தொடர்பாக நேரில் சந்திக்க அனுமதி கோரியுள்ளார்.
Input From: Hindu