ஸ்புட்னிக் V தடுப்பூசியையும் உற்பத்தி செய்ய அனுமதி கேட்டு SII நிறுவனம் விண்ணப்பம்.!
By : Bharathi Latha
இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான அதிக தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனமாக சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா(SII) திகழ்கிறது. இந்த நிறுவனம் தற்போது, கோவிஷீல்டு தடுப்பூசியை மட்டுமல்லாது, ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசியை எங்களால் உற்பத்தி செய்ய முடியும். எனவே அனுமதி தாருங்கள் என இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பு மருந்தை புனேயை சேர்ந்த சீரம் நிறுவனம்(SII) உற்பத்தி செய்து வருகிறது. ஜூன் மாதம் முதல் 10 கோடி டோஸ் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய முடியும் என அந்த நிறுவனம் மத்திய அரசிடம் சில தினங்களுக்கு முன் தெரிவித்து இருந்தது. இந்த நிறுவனம் நோவாக்ஸ் தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இதற்கு அமெரிக்காவின் ஒப்புதலுக்காக அந்த நிறுவனம் காத்துள்ளது. இந்நிலையில், ரஷ்யா கண்டுபிடித்த கோவிட் தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய அனுமதி கேட்டு, SII நிறுவனம் தற்போது விண்ணப்பித்து உள்ளது.
இதற்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளிக்கும்பட்சத்தில், ஸ்புட்னிக் V மருந்தை சீரம் நிறுவனம் இந்தியாவில் மருத்துவ பரிசோதனை செய்யும். இது வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் அந்த மருந்தை, இந்தியாவில் உற்பத்தி செய்யும் 7 வது நிறுவனமாக சீரம் நிறுவனம் இருக்கும். அதைப் போலவே ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய, Dr. ரெட்டி லேபாரட்டரிஸ், கிளாண்ட் பார்மா, ஹெடீரோ பயோ பார்மா, பனிசியா பயோடெக், ஸ்டீலிஸ் பயோபார்மா மற்றும் விர்சவ் பயோடெக் ஆகிய 6 நிறுவனங்களுடன் ஏற்கனவே ரஷ்யா ஒப்பந்தம் போட்டு உள்ளது. 125 மில்லியன் டோஸ் மருந்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய டாக்டர் ரெட்டி லேபாரட்டரிஸ் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஒரு டோஸ் மருந்தின் விலை ரூ.995 ஆக இந்தியாவில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.