மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு சிறப்பு விருது - WHO அறிவிப்பு!

By : Bharathi Latha
உலக அளவில் சுமார் ஆறு பிராந்தியங்களில் உள்ள தங்கள் கிளைகள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்குப் புகையிலை கட்டுப்பாடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டி உலக சுகாதார அமைப்பு விருது வழங்கி அவர்களை கவுரவித்து வருகிறது. அந்த வகையில், தற்பொழுதும் இந்த ஆண்டு 'உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி', உலக சுகாதார அமைப்பு இயக்குநரின் சிறப்பு அங்கீகார விருது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தியாவில் இ-சிகரெட்டை ஒழிக்கவும், புகையிலைப் பொருட்களை ஒழிக்கவும் சட்டம் இயற்றியதற்கு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் சார்பில், இயக்குநர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாசிஸ் அறிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாசிஸ் இதைப் பற்றி தன்னுடைய டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதாவது, "இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டி இந்த ஆண்டு சிறப்பு அங்கீகார விருது அவருக்கு வழங்குவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு இ-சிகரெட், புகையிலையை ஒழிக்க மத்திய அரசாங்கம் தலைமையில் அவர் எடுத்த செயல் பாராட்டுக்குரியது" எனவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஒவ்வொருவரும் புகையிலை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
