11.8 கோடி குழந்தைகளுக்கு ₹1200 கோடி நிதியுதவி - மதிய உணவுத் திட்டத்தின் கீழ் நேரடி பண பரிவர்த்தனை-.!
By : Shiva
நாடு முழுவதும் உள்ள 11.8 கோடி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் நேரடி பண பரிவர்த்தனை மூலம் நிதியுதவி அளிப்பதற்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் தகுதியுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ₹1200 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த சிறப்பு நல உதவி வழங்கப்பட உள்ளது.
பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் (PM-GKAY) கீழ் சுமார் 80 கோடி பயனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வரும் திட்டத்தின் கூடுதல் நடவடிக்கையாக மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் பண பரிவர்த்தனை மூலம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இது குழந்தைகளை ஊட்டச்சத்து அளவைப் பாதுகாக்கவும், சவாலான இந்த தொற்று நோய்க் காலத்தில் அவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பாதுகாக்கவும் பெரிதும் உதவும்.
இதற்காக மத்திய அரசு சுமார் ₹1200 கோடி ரூபாய் கூடுதல் நிதியை மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வழங்கும். மத்திய அரசின் நடவடிக்கை மூலம் நாடு முழுவதும் உள்ள 11.20 லட்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 11.8 கோடி குழந்தைகள் பயன் பெறுவார்கள் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா போன்ற இக்கட்டான காலகட்டத்தில் நலிவடைந்த மக்களைப் பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நிதி உதவிகளை செய்து வரும் நிலையில் தற்போது குழந்தைகளுக்கு உதவும் விதமாக நேரடி பணப் பரிமாற்றம் மூலம் உதவி வழங்குவது வரவேற்கத்தக்கது. கொரோனா தொடரின் அடுத்த அலை குழந்தைகளைத் தாக்கும் என்று மருத்துவர்கள் கணித்து வரும் நிலையில், அவர்களது உடல் நலத்தை பாதுகாக்க போதுமான ஊட்டச்சத்து பெற உதவும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.