Begin typing your search above and press return to search.
ரயில்வே தேர்வுகள்: 1.4 லட்சம் காலி இடங்களுக்கு 2.42 கோடி விண்ணப்பங்கள்.!
ரயில்வே தேர்வுகள்: 1.4 லட்சம் காலி இடங்களுக்கு 2.42 கோடி விண்ணப்பங்கள்.!

By : Kathir Webdesk
ரயில்வே துறையில் அப்ரெண்டிஸ் பயிற்சி பெறுபவர்களுக்கு இனி நடத்தப்பட உள்ள தேர்வுகளில் 20% இட ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், அறிவித்துள்ள 1.4 லட்சம் பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு 2.42 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் ரயில்வே தேர்வு வாரியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரயில்வேயில் காலியாக உள்ள 1.4 லட்சம் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இதில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு டிக்கெட் பரிசோதகர், ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் கிளர்க் போன்ற பணியிடங்களும் பத்தாம் வகுப்பு தகுதிக்கு ட்ராக் மெயின்டனர் மற்றும் டெக்னீசியன் பணியிடங்கள் அடங்கும்.
இந்தத் தேர்வுகள் 3 தனித்தனி அறிவிப்புகள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்த தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்து வந்தது. கடந்த மாதம் ரயில்வே துறை அமைச்சர் டிசம்பர் 15ஆம் தேதி முதல் இந்த பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
ஆனால் இந்த தேர்வுகளை ஆன்லைனில் நடத்தும் நிறுவனங்கள் இன்னும் தேர்வு செய்யப்படாமல் இருக்கும் நிலையில் தற்போது இந்த காலிப்பணியிடங்களில் 20 சதவிகிதம் இடங்கள் அப்ரெண்டிஸ் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 1.4 லட்சம் பணியிடங்களுக்கு 2.4 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ளதால் தேர்வு நீண்ட நாட்கள் பல கட்டங்களில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ள இந்த தேர்வு கூடிய விரைவில் நடத்தி முடிக்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது ரயில்வே தேர்விற்காக விண்ணப்பித்து படித்து வரும் மாணவர்கள் விரைவில் தேர்வினை முடித்து அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
இதில் என்டிபிசி எனப்படும் டெக்னிகல் அல்லாத பணியிடங்களுக்கான தேர்வு மூன்று கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை உட்பட பல கட்டங்களில் நடைபெற உள்ளது. இதனால் இந்த தேர்வு 2021ஆம் ஆண்டு முழுவதும் நடைபெறும் என்றும் 2022ஆம் ஆண்டே பணி ஆணைகள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
