1,50,000 ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்கள்: இந்தியா அடைந்த மற்றொரு மைல்கல்!
அனைவருக்கும் சுகாதார வசதி என்பதை நோக்கிய பயணத்தில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் கடந்துள்ளது.
By : Bharathi Latha
நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதை வெளிப்படுத்தும் குறிப்பிடத்தக்க சாதனையில், இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லைத் தாண்டியுள்ளது- 150,000 ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் செயல்படுத்தப் பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்பே இந்த சாதனையை நிறைவேற்றிய தேசத்தின் முயற்சிகளைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி இருக்கிறார் இந்தியா முழுவதும் திறக்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத சுகாதார மையங்கள் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் இந்த மையங்கள் நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் ஆரம்ப சுகாதார வசதிகளை எளிதாக அணுகவும் பெறவும் உதவும் என்று அவர் கூறினார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, தேசத்தின் இந்த சாதனைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்தியா தான் நினைத்த இலக்கை வெற்றிகரமாக அடைந்துவிட்டதற்காகத் தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த மற்றும் கூட்டு முயற்சிகள், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை யதார்த்தமாக்கி, உறுதி செய்யப்பட்ட, விரிவான ஆரம்ப சுகாதார சேவைகளுக்கான உலகளாவிய மாதிரியாக இந்தியாவை உருவாக்கியுள்ளது.
நாடு முழுவதும் 134 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களால் பயனடைந்துள்ளனர். மேலும் 86.90 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் தொற்றாத நோய்களுக்காக ஒட்டுமொத்தமாகப் பரிசோதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 29.95 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்திற்கும், 25.56 கோடி நீரிழிவு நோய்க்கும், 17.44 கோடி பேர் புற்றுநோய்க்கும், 17.44 கோடி பேர் மார்பகப் புற்றுநோய்க்கும், 5.66 கோடி பேர் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய்க்கும் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இதுநாள் வரை, இந்த மையங்களில் 1.60 கோடிக்கும் அதிகமான நல்வாழ்வு அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
Input & Image courtesy: PIB