17 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகை விடுவிப்பு - தமிழகத்திற்கு 1,188 கோடி!
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீடு நிலுவை தொகையாக 17000 கோடியை மத்திய அரசு விடுவித்தது. இதில் தமிழகத்திற்கு ரூபாய் 1,188 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
By : Karthiga
பல்வேறு நேரடி மற்றும் மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து மத்திய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தியது. இந்த வரி விதிப்பால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடு கட்டுவதற்காக அவற்றுக்கு இழப்பீட்டு தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதன்படி நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் - ஜூன் மாத காலத்துக்கான ஜி.எஸ்.டி இழப்பீடு நிலுவை தொகையாக 17000 கோடியை மத்திய அரசு தற்போது விடுவித்துள்ளது. இதன் மூலம் நடப்பு நிதி ஆண்டில் மொத்தம் 1,15,662 கோடி விடுவிக்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு விடுவித்த இந்த தொகையில் தமிழகத்துக்கு ₹ 1188 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு 73 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருக்கிறது. நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:- மாநிலங்களுக்கு நடப்பு நிதி ஆண்டில் மொத்தம் 1,15,62 கோடி ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த அக்டோபர் மாதம் வரை 72 ஆயிரத்து 147 கோடி தான் செஸ் வசூலாகி இருக்கிறது. எனினும் மத்திய அரசு தனது சொந்த நிதியிலிருந்து மீதமுள்ள 43,515 கோடியே விடுவித்து இருக்கிறது. இதன் மூலம் நிதியாண்டின் இறுதிவரை வசூல் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ள மொத்த செஸ் தொகையும் விடுவிக்கப்பட்டிருக்கிறது.
மாநிலங்கள் தங்கள் வளத்தை பராமரிக்கவும் அவர்களது திட்டங்கள் செயல்படுத்துவதை உறுதி செய்யவும் வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக நிதியாண்டில் மூலதன செலவினம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகிறது. கடந்த பிப்ரவரி - மே காலத்துக்கான ஜி.எஸ்.டி இழப்பீடாக கடந்த மே மாதம் 86 1912 கோடி விடுவிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிதியில் சுமார் 25,000 கோடி மட்டுமே இருந்தபோதிலும் மீதமுள்ள 62 ஆயிரம் கோடியை மத்திய அரசு தனது சொந்த பணத்திலிருந்து வழங்கியது. இவ்வாறு நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.