2 ஆண்டுகளுக்குப் பிறகு தடையை நீக்கி, இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்த பாகிஸ்தான்!

By : Bharathi Latha
இந்தியாவில் இருந்து சர்க்கரை மற்றும் பருத்தியை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் விதித்திருந்த, 19 மாத தடையை முழுமையாக விலக்குவதாக, பாகிஸ்தான் நிதியமைச்சர் ஹம்மத் அசார் அறிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய பருத்தி உற்பத்தியாளராகவும், இரண்டாவது பெரிய சர்க்கரை உற்பத்தியாளராகவும் இந்தியா உள்ளது. 2019 வரை, இந்திய பருத்தியை வாங்குபவர்களில் பாகிஸ்தான் முன்னணியில் இருந்தது. இருப்பினும், பின்னர் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த பின்னர் பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதித்தது.
தற்போது பாகிஸ்தானில் பருத்தி உள்ளிட்ட பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடுகள் நிலவி வந்ததால், இந்திய இறக்குமதி மீதான தடையை நீக்க வலியுறுத்தி அந்நாட்டு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி இருந்தன. சமீபத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவங்களிடையே அமைதியை ஒப்பந்தத்தை முழுமையாக கடைபிடிக்க ஒப்புக்கொண்ட நிலையில், இறக்குமதி விஷயத்திலும் சுமூக முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் தினத்தன்று வாழ்த்துக்களை தெரிவித்ததற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய ஒரு நாள் கழித்து, இறக்குமதி தடை நீக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
இம்ரான் கான் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ஜம்மு-காஷ்மீர் பற்றியும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அமைதி பற்றியும் பேசினார். பாகிஸ்தான் மக்களும் இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான, கூட்டுறவு உறவை விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார். "தெற்காசியாவில் நீடித்த அமைதி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் தகராறைத் தீர்ப்பதில் தொடர்ந்து உள்ளது என்பதை நாங்கள் நம்புகிறோம்" என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
