Kathir News
Begin typing your search above and press return to search.

சீனாவின் மூக்கை உடைக்க ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கிறதா இந்தியா?

சீனாவின் மூக்கை உடைக்க ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கிறதா இந்தியா?

சீனாவின் மூக்கை உடைக்க ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கிறதா இந்தியா?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Oct 2020 3:39 PM IST

நேபாளம் மற்றும் பூட்டானுக்கு வடக்கே உள்ள இடம் திபெத். இமயமலையின் உச்சி சரிவில் சீனாவின் கடைசி எல்லையாகவும், அதே சமயம் சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் பல நூறு ஆண்டுகளாக தனி சுதந்திர நாடாகவும் 1959ம் ஆண்டுவரை இருந்த ஒரு நாடாகும். தலாய்லாமாதான் இந்த சிறிய தேசத்தின் ஆன்மீக மற்றும் அரசியல் தலைவராக இருந்தவர்.

நேபாளம் நமக்கு சொந்த நாடு அல்ல, ஆனால் ஹிந்துக்கள் என்ற முறையில் சொந்தக்காரர்கள் நாடு. திபெத்தும் அப்படித்தான், அது நம் சொந்த நாடு அல்ல, என்றாலும் ஹிந்து மதத்திலிருந்து பிரிந்து சென்ற கிளை மதம் என்பதாலும், புத்தர் மீது இந்தியர்களுக்கு இருந்த மதிப்பு காரணமாக அதுவும் இந்தியாவுக்கு ஒரு சொந்தக்காரர்கள் நாடாகவே கருதப்படுகிறது. மேலும் தலாய்லாமாவும், அவரது புத்தமத பிரிவினரும் பரம்பரை, பரம்பரையாக சீனர்களை விட இந்தியாமீது அதிக நட்பைக் கொண்டவர்கள். இந்தியாவை ஒரு தாய் வீடு போல கருதுபவர்கள். இந்திய கலாச்சாரத்தை விரும்புபவர்கள்.

ஆனால் திபெத்தியர்கள் இந்தியா மீது கொண்டிருக்கும் நெருக்கம் சீனாவுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் சீனா இன்னமும் லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை தங்களுடைய முப்பாட்டன் சொத்து என நினைக்கிறது. தங்களது சொத்தை இந்தியா அனுபவிப்பதாக நினைத்து தினமும் எல்லையில் 73 ஆண்டுகளாக குடைச்சல் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் அருணாச்சல பிரதேச மக்கள் விரும்பி எப்படி இந்தியாவுடன் இணைந்து கொண்டார்களோ, லடாக் வாசிகள் எப்படி இந்தியாவுடன் தங்களை ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டார்களோ அதேபோல தலாய்லாமா தலைமையில் உள்ள திபெத்தியர்களும் இந்தியா பக்கம் சாய்ந்து விட்டால் திபெத்தை இழந்து விடுவோம் எனக் கருதிய சீனா 1959ம் ஆண்டு தனது பெரும் பீரங்கிப் படையுடன் திபெத்திற்குள் நுழைந்து சாதுக்கள் நிறைந்த அந்நாட்டை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டது.

இந்தியா உட்பட உலகம் சீனாவின் இந்த செயலை கண்டித்தது. ஆனால் சீனாவை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. திபெத் நாட்டை சீனா கைப்பற்றிக் கொண்டதால், அந்த நாட்டின் தலைவராக இருந்த தலாய் லாமா இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவருடன் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான திபெத்தியர்களும் சீனாவின் கொடுமைகளுக்கு பயந்து இந்தியாவுக்கு வந்துவிட்டார்கள்.

அவருக்கு இந்திய அரசாங்கம் அடைக்கலம் கொடுத்தது. இப்போதும் திபெத்திலுள்ள லட்சக்கணக்கான மக்கள் தங்கள் திபெத் பூமி சீனர்களிடமிருந்து சுதந்திரம் அடைய வேண்டும், இந்தியாவில் உள்ள தலைவர் தலாய்லாமா தம் மக்களுடன் திரும்பி மீண்டும் நாடாள வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் சீனர்களுக்கு அடங்கி ஒடுங்கி அங்கே அடிமைபோல கிடக்கிறார்கள்.

தலாய்லாமாவுக்கு இந்தியா தஞ்சம் அளித்ததால் சீனாவுக்கு இந்தியாவின் மேல் மேலும் கோபம் அதிகரித்தது. இதனால்தான் இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் நேரு காலத்தில் இருந்து பிரதமர் மோடி காலம் வரை யாரும் தலாய்லாமாவை விட்டுக் கொடுத்ததில்லை.

இந்த நிலையில் தற்போது தலாய்லாமாவுக்கு வயதாகிவிட்டது. சமீபத்தில் கொரோனா நோயால் அவர் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இப்போது அவரால் தன சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாது. அமெரிக்கா, இந்தியா உட்பட நாடுகள் அவருக்கும் , சுதந்திர திபெத்துக்கும் ஆதரவு அளித்தாலும் வல்லரசு நாடுகளில் ஒன்றாக ஆகிவிட்ட சீனாவை ஒன்றும் செய்ய முடியாமல் உள்ளது.

தனது வாழ்க்கை முடியும் தருவாயிலும் சுதந்திர திபெத்தை காண முடியாத துயரத்தில் தலாய்லாமாவும், அவரது ஆதரவளர்களும் உள்ளனர். அடுத்த தலாய்லாமாவையும் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தாய் நாட்டுக்கு சுதந்திரமும் கிடைக்கவில்லை, அங்கு செல்லவும் முடியவில்லை என்கிற வலியுடன் திபெத்தியர்கள் உள்ளனர். இந்நிலையில் திபெத்தியர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் அச்சுறுத்தும் சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கலாமா என இந்தியா சிந்தித்து வருவதாக பேசப்படுகிறது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஓன்று தலாய்லாமா விவகாரத்தில் நிரந்தர முடிவுக்கு வருவது. இதன் மூலம் சீனாவின் திமிரை அடக்குவது, இதற்கான திட்டங்கள் குறித்து ஆராயப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தலாய்லாமாவுடன் இங்கு வந்த திபெத்தியர்களின் வாரிசுகளைக் கொண்டு SSF என்கிற சிறப்பு எல்லைப்புற பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வீரர்கள் ஏற்கனவே நடந்த பாகிஸ்தானுடனான போர்களில் தங்கள் வீரத்தை விசுவாசத்துடன் காட்டியவர்கள். இந்த படையை சேர்ந்த நியிமா டென்சின் என்கிற வீரர் சென்ற ஆகஸ்ட் மாதம் சீனர்களுட்ன் நடைபெற்ற ஒரு மோதலில் எல்லையில் கொல்லப்பட்டார்.

அவருடைய உடல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.அவருக்கு இராணுவ மரியாதையுடன் அடக்கம் நடந்தது. அப்போது அவருடைய உடல் மீது இந்திய மற்றும் திபெத் இரு நாட்டு கொடிகளையும் போர்த்தி இந்திய அதிகாரிகள் வீர வணக்கம் செய்தனர். இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஆங்கிலம் உட்பட அனைத்து மொழி டி.வி சானல்களும் ஒளி பரப்பின.

திபெத் கொடியும் சேர்த்து போரத்தப்பட்டதால் சீனா இப்போது இந்தியாமீது ஒரு வித அச்சத்தில் உள்ளதாம். திபெத்தில் இந்தியா தேசீய உணர்வை இவ்வாறு ஏற்படுத்தினால் அங்கே மீண்டும் கிளர்ச்சி நடக்கும், அதற்கு இந்தியா ஆயுதங்கள் கொடுத்து உதவலாம் என அச்சம் அடைந்துள்ளதாம். இந்நிலையில் ஓய்வு பெற்ற ரா அமைப்பின் அதிகாரி ஜெயதேவா ரானடே கூறுகையில் " இந்தியாவின் இந்த முடிவு உங்கள் நாட்டு மக்கள் எங்களுடன் போராடுகிறார்கள் என்பதை சீனாவுக்கு காட்டுவதாக கூறியுள்ளார்.

மேலும் அடுத்த தலாய்லாமா தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அமைதி வழி போராட்டம் என்பது ஆயுத வழிப் போராட்டமாக மாறலாம் என்றும் இந்த திபெத் விவகாரம் இனி இந்தியாவின் துருப்புச் சீட்டாக மாறலாம் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News