ரூ. 24,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்.. நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்..
ரூ. 24,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
By : Bharathi Latha
ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீரில் ரூ. 24,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சுமார் ரூ. 11,125 கோடி செலவிலான அமிர்தசரஸ் - ஜாம்நகர் பொருளாதார வழித்தடத்தின் ஆறு வழி பசுமை விரைவுச்சாலை பிரிவு, சுமார் ரூ.10,950 கோடி மதிப்புள்ள பசுமை எரிசக்தி வழித்தடத்தில் மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற பாதையின் முதல் கட்டம், சுமார் ரூ.1,340 கோடி செலவில் பவர் கிரிட் உருவாக்கும் பிகானீர் முதல் பிவாடி வரையிலான பரிமாற்ற வழித்தடம் ஆகியவை அர்ப்பணிக்கப்பட்ட திட்டங்களில் அடங்கும்.
பிகானீரில் 30 படுக்கைகள் கொண்ட புதிய தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக (இ.எஸ்.ஐ.சி) மருத்துவமனை, சுமார் ரூ.450 கோடி செலவில் பிகானீர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள், 43 கிலோ மீட்டர் நீளமுள்ள சுரு - ரத்தன்கர் பிரிவில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஆகியவற்றுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், வீரர்களின் நிலம் ராஜஸ்தான் என்று கூறி இந்த நிலத்திற்கு மரியாதை செலுத்துவதாகக் கூறினார். மாநிலத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் மக்கள் செயல்படுவதாக அவர் கூறினார். வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பை மக்கள் தமக்கு வழங்குகிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
ரூ. 24,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் இன்று தொடங்கப்படும் திட்டங்களைக் குறிப்பிட்ட பிரதமர், ராஜஸ்தான் சில மாதங்களுக்குள் இரண்டு நவீன ஆறு வழி விரைவுச்சாலைகளைப் பெற்றது என்று குறிப்பிட்டார். பிப்ரவரி மாதம் தில்லி - மும்பை விரைவு வழித்தடத்தில் தில்லி - தவுசா - லால்சோட் பிரிவை தாம் திறந்து வைத்ததை பிரதமர் நினைவுகூர்ந்தார். அமிர்தசரஸ் - ஜாம்நகர் விரைவுச்சாலையின் 500 கிலோ மீட்டர் ஆறு வழி பசுமை விரைவுச்சாலை பிரிவை இன்று திறந்து வைக்கும் வாய்ப்பைத் தாம் பெற்றுள்ளதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
Input & Image courtesy: News