அப்புறம் எப்படிப்பா பெட்ரோல் விலை குறையும்? மத்திய அரசு இசைந்த போதிலும், அடம் பிடிக்கும் தமிழகம்!
25 States have so far undertaken reduction of VAT on Petrol and diesel
By : Muruganandham
பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் 25 மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை இதுவரை குறைத்துள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை கணிசமாகக் குறைப்பதற்காக நவம்பர் 3, அன்று மத்திய அரசு எடுத்த முடிவைப் பின்பற்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை முறையே ரூ 5 மற்றும் ரூ 10 மத்திய அரசு குறைத்த போது, பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை மாநிலங்கள் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆனால் சில மாநிலங்கள் எவ்வித வரி குறைப்பையும் மேற்கொள்ளவில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியைக் குறைக்காத மாநிலங்களின் பட்டியலில், மகாராஷ்டிரா, தில்லி, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
வாட் குறைப்பை தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட 25 மாநிலங்கள் கணிசமாக குறைந்துள்ளன. வாட் வரி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பஞ்சாபில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.16.02 குறைந்துள்ளது, அதைத் தொடர்ந்து லடாக்கில் ரூ.13.43 மற்றும் கர்நாடகாவில் ரூ.13.35 குறைந்துள்ளது.
அந்தமான் & நிக்கோபாரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.96 ஆகவும், அருணாச்சல பிரதேசத்தின் இட்டாநகரில் ரூ.92.02 ஆகவும் உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.117.45 ஆகவும், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ரூ.115.85 ஆகவும் உள்ளது.
டீசலின் விலை லடாக் யூனியன் பிரதேசத்தில் லிட்டருக்கு ரூ.19.61 குறைந்துள்ளது, அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் ரூ.19.49 மற்றும் புதுச்சேரியில் ரூ.19.08 குறைந்துள்ளது. அந்தமான் & நிக்கோபாரில் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 77.13 ஆகவும், மிசோரமின் ஐஸ்வாலில் ரூ. 79.55ஆகவும் உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.108.39 ஆகவும், ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.107.48 ஆகவும் உள்ளது.