4 லட்சம் உயிர்களை காத்த பிரதமரின் திட்டம்: உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் தகவல்!
By : Kathir Webdesk
இந்தியாவில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் நீர் வழங்கும் திட்டத்தின் மூலம் ஆக்கப்பூர்வமான மிகப் பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என நித்தி ஆயோக் உறுப்பினர் விகே பால் கூறியுள்ளார்.
இத்திட்டத்தால் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்து உலக சுகாதார அமைப்பின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை புதுதில்லியில் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பால், பாதுகாப்பான குடிநீர் மூலம் நோய்கள் தடுக்கப்பட்டு உயிர்கள் காக்கப்படுவதாகவும், மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுவதன் மூலம் 4,00,000 இறப்புகளையும், வயிற்குப் போக்கு போன்றவற்றால் ஏற்படக் கூடிய 1,40,00,000 நோய் பாதிப்புகளையும் தடுக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், 101 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருளாதார சேமிப்பு ஏற்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் ராஜீவ் மத்திய அரசின் ஜல் ஜீவன் இயக்கத்தால் சுகாதாரத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க பலன்கள் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
கிராமப்புறங்களில் தற்போது 62.84 சதவீத வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Input From: NewsOnAir