50% குழந்தைகளுக்கு கொரோனாவை எதிர்க்கும் திறன் உருவாகியுள்ளது - மும்பை ஆய்வு!

By : Bharathi Latha
இந்தியாவில் இனி வரவிருக்கும் கொரோனா மூன்றாவது அலை காரணமாக, குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவர் என்றும் மேலும் அவர்களுக்கு தகுந்த அளவில் ஊட்டச்சத்துகளை வழங்க வேண்டியது பெற்றோர் கடமை என்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் அறிவுரைகளும், ஆலோசனைகளும் கூறப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது, மும்பையில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட செரோ ஆய்வின்படி, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு உள்ளது என்பது தொடர்பான மற்றும் அவர்களுக்கு நோய்தொற்று பாதிக்கும் அளவு அதிகமாக உள்ளதா? என்பது போன்ற பல்வேறு வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனால் கொரோனா 3வது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவது மிகவும் குறையலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா எதிர்ப்புத் திறன் உருவாகியிருப்பதாகத் மும்பை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட செரோ ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதாவது மும்பையில் 50% குழந்தைகளுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. இதன் காரணமாக அவர்களின் நோய் எதிர்ப்பு திறன் முன்பை விட தற்பொழுது அதிகரித்திருப்பதாகவும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
தற்போது ஒன்று முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 51.18% குழந்தைகளுக்கு கொரோனா எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இது கடந்த மார்ச் மாதம் 39.04 சதவீதமாக இருந்தது. தற்போதைய ஆய்வில், 10 முதல் 14 வயதுடையவர்களில் 53.43 % பேருக்கும், 1- 4 வயதுடையவர்களில் 51.04 சதவீதம் பேருக்கும் கொரோனா எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது. இது முன்பை விட தற்பொழுது மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுவது வெகுவாகக் குறையும் என செரோ ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
