3 ஆண்டுகளில் 51 லட்சம் தொழில் முனைவோர் பயன் - 32,000 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம்.!
3 ஆண்டுகளில் 51 லட்சம் தொழில் முனைவோர் பயன் - 32,000 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம்.!

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தை 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் அல்லாத, வேளாண் தொழில் சாராத நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் தொகை வழங்குவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
வணிக வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் முத்ரா கடன்களை வழங்குகின்றன.
இந்த முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில் மேம்பாட்டுக்காக வங்கிகள் வாயிலாக மூன்று பிரிவுகளில் கடனுதவி வழங்கப்படுகிறது. சிஷு என்ற பெயரில் ரூ.50,000 வரையிலும், கிஷோர் என்ற பெயரில் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் என்ற பெயரில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலமாக சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பும் பலர் கடனுதவிகளைப் பெற்று தொழில் முனைவோராக முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இந்நிலையில் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் 51 லட்சம் தொழில் முனைவோர் பயன்பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சமூக தொழில் முனைவுக்கான விருது வழங்கும் விழாவில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசுகையில், 2015 முதல் 2018 வரையில் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 51 லட்சம் புதிய தொழில் முனைவோர் பயன்பெற்றுள்ளதாக கூறினார். மேலும் ஸ்டார்ட் அப் துறையில் 32,000 மேற்பட்ட நிறுவனங்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.