60 பில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் சேமித்த திட்டம்! வருடத்துக்கு 4.5 கோடி டன் கரியமில வாயு வெளியேற்றம் தடுப்பு!
60 பில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் சேமித்த திட்டம்! வருடத்துக்கு 4.5 கோடி டன் கரியமில வாயு வெளியேற்றம் தடுப்பு!

நான்காவது இந்திய எரிசக்தி மன்றத்தின் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான ஆதாரங்களை அதிகரிப்பதில் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதாக கூறினார்.
36 கோடிக்கும் அதிகமான எல் ஈ டி மின்விளக்குகளை விநியோகித்தது, எல்.ஈ.டி மின்விளக்குகளின் விலையை பத்து மடங்கு குறைத்தது, கடந்த ஆறு வருடங்களில் 1.1 கோடிக்கும் அதிகமான திறன்மிகு எல்.ஈ.டி தெரு விளக்குகளை அமைத்தது போன்ற இடையீடுகள் தூய்மையான எரிசக்தி முதலீட்டுக்கான மிகவும் கவர்ச்சிகரமான வளர்ந்து வரும் சந்தையாக இந்தியாவை மாற்றியுள்ளதாக பிரதமர் கூறினார். இந்த நடவடிக்கைகளின் மூலம் வருடத்துக்கு 60 பில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் சேமிக்கப்படுவதாகவும், வருடத்துக்கு 4.5 கோடி டன்களுக்கும் அதிகமான கரியமில வாயு வெளியேற்றம் குறைந்துள்ளதாகவும், வருடத்துக்கு சுமார் ரூ 24,000 கோடி சேமிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
சர்வதேச உறுதியைக் காப்பாற்ற இந்தியா சரியான பாதையில் செல்வதாக பிரதமர் குறிப்பிட்டார். 2022-க்குள் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை நிறுவுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, 2030-க்குள் 450 ஜிகாவாட் எரிசக்தி திறனை எட்டும் வகையில் உயர்த்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார். தொழில் உலகத்தின் பல்வேறு நாடுகளை விட இந்தியாவின் கரியமில வாயு வெளியேற்றம் குறைவாக உள்ள போதிலும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் தனது முயற்சிகளை இந்தியா தொடரும் என்று அவர் கூறினார்.
எரிசக்தித் துறையின் சீர்திருத்தங்கள் கடந்த ஆறு வருடங்களில் வேகமெடுத்துள்ளதாக பிரதமர் கூறினார். ஆராய்ச்சி மற்றும் உரிமக் கொள்கையில் செய்யப்பட்டிருக்கும் சீர்திருத்தங்கள், வருவாய் அதிகப்படுத்துதலில் இருந்து உற்பத்தி அதிகப்படுத்துதல் நோக்கிய கவன மாற்றம், அதிக வெளிப்படைத்தன்மை மீதான கவனம், ஒழுங்குப்படுத்தப்பட்ட நடைமுறைகள் மற்றும் 2025-க்குள் சுத்திகரிப்பு திறனை 250 மில்லியன் மெட்ரிக் டன்களில் இருந்து 400 மில்லியன் மெட்ரிக் டன்களாக அதிகரித்தல் போன்ற பல்வேறு பெரும் சீர்திருத்தங்களை அவர் பட்டியலிட்டார். உள்நாட்டு எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பது அரசின் முக்கிய முன்னுரிமை என்று கூறிய அவர், 'ஒரே தேசம், ஒரே எரிவாயு தொகுப்பின்' வாயிலாக எரிவாயு சார்ந்த பொருளாதாரமாக நாட்டை மாற்றுவதன் மூலம் இது எட்டப்படும் என்று கூறினார்.