9 ஆண்டுகளில் 332% வளர்ச்சியை பதிவு செய்த காதி கிராமத் தொழில்கள் - தற்சார்பு இந்தியா திட்டம் கொடுத்த ஊக்கம்!
By : Kathir Webdesk
பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையின் கீழ் ‘தற்சார்பு இந்தியா திட்டத்தை’ புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் வலுவான இந்தியாவின் தோற்றத்தை உலக நாடுகள் முன் வைத்துள்ளது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன் முறையாக, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையப் பொருட்களின் விற்றுமுதல் ரூ. 1.34 லட்சம் கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
ஊரகப் பகுதிகளில் வசிக்கும் கைவினைஞர்களால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட காதி பொருட்களின் விற்பனை, கடந்த 9 ஆண்டுகளில் 332% என்ற இமாலய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
2013-14 நிதியாண்டில் ரூ. 31,154 கோடியாக இருந்த இந்த ஆணைய பொருள்களின் விற்றுமுதல், 2022-23 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ. 1,34,630 கோடியாக அதிகரித்துள்ளது.
அதேபோல ஊரகப் பகுதிகளில் 9,54,899 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றொரு புதிய சாதனையையும் படைத்துள்ளது.
மகாத்மா காந்தியால் எழுச்சி பெற்று, பிரதமர் மோடி மற்றும் நாட்டின் கடைகோடி கிராமங்களில் உள்ள கைவினைக் கலைஞர்களின் அயராத கடின உழைப்பினால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது என்று ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் தெரிவித்தார்.
உள்நாட்டிலும், வெளிநாடுகளின் அனைத்து தளங்களிலும் பிரதமர் திரு நரேந்திர மோடி காதிப் பொருட்களை ஊக்குவித்ததன் காரணமாக, இந்தப் பொருட்கள் அதிகளவில் பிரபலம் அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உலகளவில் மிகுந்த நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனங்களுள் காதிப் பொருட்களும் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார். நிதியாண்டு 2013-14 முதல் 2022-23 வரை காதி மற்றும் கிராமத் தொழில்துறை பொருட்களின் உற்பத்தி 268% அதிகரித்ததோடு, 332%ஆக விற்பனை உயர்ந்து, அனைத்து சாதனைகளையும் முறியடித்தது
‘உள்நாட்டுத் தயாரிப்புகள்’, ‘உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுத்தல்' மற்றும் ‘மேக் இன் இந்தியா' ஆகிய திட்டங்களின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு இது ஒரு சான்றாகும் என்றார்.
Input From: NewsOnair