Kathir News
Begin typing your search above and press return to search.

பெரு நிறுவனங்கள் உற்பத்தி செய்த தேனில் கலப்பட குற்றச்சாட்டு: பதஞ்சலி, டாபர், ஜண்டு நிறுவனங்கள் திட்டவட்ட மறுப்பு.!

பெரு நிறுவனங்கள் உற்பத்தி செய்த தேனில் கலப்பட குற்றச்சாட்டு: பதஞ்சலி, டாபர், ஜண்டு நிறுவனங்கள் திட்டவட்ட மறுப்பு.!

பெரு நிறுவனங்கள் உற்பத்தி செய்த தேனில் கலப்பட குற்றச்சாட்டு: பதஞ்சலி, டாபர், ஜண்டு நிறுவனங்கள் திட்டவட்ட மறுப்பு.!

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  8 Dec 2020 3:04 PM GMT

மக்களிடையே வரவேற்பு பெற்றிருக்கும் மிகப்பெரிய நிறுவனங்கள் நவீன பேக்கிங்குகளில் தேனை அடைத்து கவர்ச்சியான விளம்பரங்களில் விற்கின்றன. மக்கள் அதை நம்பி பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சிஎஸ்ஈ எனப்படும் சுற்றுச்சுழல் கண்காணிப்பு அமைப்பான சென்டர் பார் சைன்ஸ் அண்ட் என்விரோன்மென்ட் அமைப்பு, சோதனையில் கடைகள் மற்றும் சூப்பர் மார்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் தேனை Nuclear Magnetic Resonance எனப்படும் சோதனை முறையில் ஆய்வகத்தில் வைத்து சோதித்து பார்த்தது.

இந்த சோதனையில் டாபர், பதஞ்சலி, பைதியநாந்த், ஜன்டு, ஹிட்கரி, ஏபிஸ் ஹிமாலயா ஆகிய முக்கிய பிராண்டுகளின் தேன் சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

அதேசமயம் சபோலா, மார்க்பெட்சோனா, நேச்சர்ஸ் நெக்டார் ஆகிய 3 பிராண்டுகளின் தேன் சோதனையில் மட்டுமே வெற்றி அடைந்துள்ளதாகவும், மற்ற பிராண்டுகளின் தேன்களில் இந்தியப் பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட முடியாத திரவம் கலந்திருப்பதாக சிஎஸ்ஈ அமைப்பு கூறியுள்ளது.

மேலும் சிஎஸ்ஈ அமைப்பு செய்த சோதனையில் தேனில் கலக்கப்பட்ட சர்க்கரை பாகு, சாதாரணச் சர்க்கரை பாகு அல்ல என்பது சோதனையில் கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட சர்க்கரை பாகு எனச் சிஎஸ்ஈ அமைப்பின் உணவு பாதுகாப்பு மற்றும் நச்சுக்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து சி.எஸ்.இ.யின் டைரக்டர் ஜெனரல் சுனிதா நரேன் கூறுகையில், “நாம் தேனை உட்கொள்கிறோம் - இது தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் என நம்புகிறோம். ஆனால் சர்க்கரையுடன் கலப்படம் செய்யப்பட்ட தேன் நம் உடலுக்கு சுகாதாரம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தேன் வணிகத்தில் உள்ள இந்திய நிறுவனங்கள் தேனுடன் கலப்படம் செய்வதற்காக சீனாவிலிருந்து செயற்கை சர்க்கரை பாகை இறக்குமதி செய்கின்றன என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

”இந்த சீனப்பாகு கலப்படம் செய்யப்பட்ட தேனை தூய தேனாக காண்பிக்க” பயன்படுகின்றன என்றும் நரேன் தெரிவித்துள்ளார். இந்த செய்திகள் குறித்து இந்திய நுகர்வோர் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆனால் ஆய்வு முடிவுகளை, குறிப்பிட்ட பிராண்ட் நிறுவனங்கள் மறுத்துவருகிறது. குறிப்பாக, 'டாபர்' நிறுவனம், இந்த ஆய்வு அறிக்கை உள்நோக்கம் கொண்டது. எங்கள் மீது அவதூறு பரப்புவதற்காகவே இவ்வாறு வெளியிடப்பட்டிருக்கிறது எனக் கூறியுள்ளது. இந்திய அரசின் உணவுத் துறை கட்டுப்பாட்டு அமைப்பின் விதிகளுக்குட்பட்டே நாங்கள் தேன் தயார் செய்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது.

அதேபோல் 'ஜண்டு' நிறுவனமும் தங்கள் மீதான இந்தக் குற்றச்சாட்டுப் போலியானது, உள்நோக்கம் கொண்டது எனக் கூறியுள்ளது. அதேபோல், 'பதஞ்சலி' நிறுவனமும், தங்கள் மீதான புகாரை மறுத்துள்ளது. இயற்கை உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தங்களைக் களங்கப்படுத்த தங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சதி இது எனக் கூறியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News