பா.ஜ.க மாநிலங்களின் விவசாய கொள்கையை புகழ்ந்து தள்ளும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து!
குறைந்தபட்ச ஆதரவு விலை குறைவாகவே கொடுப்பதாகவும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து தெரிவித்துள்ளார்.
By : Shiva
பாஜக ஆளும் மாநிலங்களில் கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகமாக இருப்பதாகவும், ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயச் செலவு அதிகமாக இருந்த போதும் குறைந்தபட்ச ஆதரவு விலை குறைவாகவே கொடுப்பதாகவும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் ஒவ்வொரு ஒவ்வொரு பயிரின் விலையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. ஆனால் பஞ்சாப் மாநில அரசு அதன் மாநிலத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்கையின் கீழ் முடிவு செய்யப்படும் கரும்பின் விலை 2017ஆம் ஆண்டு முதல் உயர்த்தப்படவில்லை. இந்த ஆண்டுகளில் கரும்பு வளர்ப்புக்கான உள்ளீட்டு செலவு பன்மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் ஹரியானா, உத்தரகண்ட் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்கள் பஞ்சாப்பை விட அதிக விலையை நிர்ணயித்துள்ளன.
இதனை சுட்டிக் காட்டும் விதமாக பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசு கொடுக்கும் குறைந்தபட்ச விலையை காட்டிலும் பஞ்சாப் மாநிலத்தில் குறைவாகவே கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களை விட பஞ்சாப் கரும்பு விவசாயிகளுக்கு குறைவான விலையில் கொடுப்பதாக சித்து தெரிவித்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஊழல்வாதிகள் மோடியை கண்டு பயப்படதான் வேண்டும் என்று தெரிவித்திருந்தார். பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் மற்றும் மாநில தலைவர் சித்து இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில் தற்போது அவர் பாஜகவை புகழ்ந்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.