போலீசார் அத்துமீறலை தடுக்க சிசிடிவி.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
போலீசார் அத்துமீறலை தடுக்க சிசிடிவி.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உடனடியாக சிசிடிவி கேமராவை பொருத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பொதுவாக காவல் நிலைத்திற்கு செல்பவர்களை தகாத வார்த்தைகளால் பேசுவதும் மட்டுமினறி, அவர்களை அடித்து துன்புறுத்தும் செயல்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. மேலும், லாக்கப்பில் வைத்து கொலையும் செய்யும் நிகழ்வுகள் நடைபெறுகிறது. இதனை தடுக்கும் விதமாக உச்சநீதிமன்றம் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது.
அண்மையில் கூட தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகனை காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவமும், விருதாச்சலத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி செல்வமுருகன் திடீரென உயிரிழந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்று போலீசார் மீது குற்றச்சாட்டுகள் குவியத் தொடங்கியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் இந்த நிலைமை தொடர்கிறது. இந்நிலையில், காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்காக சிசிடிவி கேமரா அமைக்கக் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என நீதிபதிகள் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளனர். ஏற்கனவே பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.