லடாக்கில் சீன ராணுவ வீரர் கைது - உரிய நடைமுறைக்குப் பின் ஒப்படைக்கப்படுவார்.!
லடாக்கில் சீன ராணுவ வீரர் கைது - உரிய நடைமுறைக்குப் பின் ஒப்படைக்கப்படுவார்.!

By : Kathir Webdesk
லடாக்கில் எல்லைக் கோட்டுப் பகுதிக்கு அருகே டெம்சொக் என்ற இடத்தில் இன்று காலை சீன ராணுவ வீரர் ஒருவரை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது. கார்ப்பொரல் வாங் யாலாங் என்ற அந்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்ட போது ராணுவ மற்றும் குடிமை சம்பந்தமான ஆவணங்களை கையில் வைத்திருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியா டுடே ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின்படி லடாக்கில் டெம்சொக் பகுதியில் கைது செய்யப்பட்ட அந்த சீன வீரரை இந்திய ராணுவம் காவலில் எடுத்து விசாரித்து வருவதாகத் தெரிகிறது.
"அக்டோபர் 19 அன்று எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் வந்த கார்ப்பொரல் வாங் யாலாங் என்ற சீன ராணுவ வீரர் ஒருவர் கிழக்கு லடாக்கின் டெம்சொக் பகுதியில் கைது செய்யப்பட்டார்" என்று இதுகுறித்து இந்திய ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. காணாமல் போன தங்கள் வீரரைப் பற்றி சீன ராணுவம் தங்களிடம் விசாரித்ததாகவும் இந்திய ராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட வீரர் ஆயுதங்களை பழுது பார்ப்பவர் என்றும் அவரது கையில் ராணுவம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இருந்ததாகவும் அவர் உளவு பார்க்க வந்தாரா என்று விசாரித்து வருவதாகவும் இந்திய ராணுவத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பனி மற்றும் மோசமான பருவநிலையில் இருந்து காக்கும் வகையில் அந்த ராணுவ வீரருக்கு ஆக்சிஜன், உணவு மற்றும் இதமான உடைகள் உட்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு மருத்துவ உதவியும் செய்யப்பட்டதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது. அதிகாரப் பூர்வமான நடவடிக்கைகளை பின்பற்றி வழக்கமான நடைமுறைகள் முடிந்த பின்னர் சுஷுல் மோல்டோ பகுதியில் சீன அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என்றும் இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கும் மேலாக இந்தியா-சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை நீடித்து வரும் நிலையில் இவ்வாறு சீன ராணுவ வீரர் இந்தியப் பகுதிக்குள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை. எனினும் சில மாதங்களுக்கு முன்பு இந்திய ராணுவ வீரர்களுக்கு வழி காட்டி களமாகவும் உணவு எடுத்து வந்தும் உதவி புரிந்த அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களை சீன ராணுவம் பிடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
