பிரதமர் மோடி ஆட்சியில் காணாமல் போன மின்வெட்டு: சுவாரசிய தகவல்கள்.!
பிரதமர் மோடி ஆட்சியில் காணாமல் போன மின்வெட்டு: சுவாரசிய தகவல்கள்.!

By : Kathir Webdesk
கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுன்னணி ஆட்சியின்போது ராஜிவ் கிராமப்புற மின்வசதி திட்டம் என்ற ஒன்றை அறிவித்தும் எந்த விதத்திலும் அந்த திட்டம் பயன்படாமலே போனது. சட்டையில் இருந்தால்தான் அகப்பைக்கு வரும் என்பார்கள். எந்தவிதமான புதிய மின் உற்பத்தி நடவடிகைகளும் எடுக்கப்படாததால் இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களுமே 6 ஆண்டுகளுக்கு முன் வரை மின்வெட்டால் கஷ்டப்பட்டன.
இந்தியா முழுவதும் ஏராளமான தொழிற்சாலைகள் மின்வெட்டால் அடிக்கடி மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன. தமிழகத்தில் கோவை, திருப்பூர் பகுதிகளில் தொழிலகங்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள்,தொழிலதிபர்கள் என வீதிக்கு வந்து போராடினார்கள். பகுதிநேர மின்வெட்டு, முழுநேர மின் வெட்டு, அறிவிக்கப்பட்ட மின்வெட்டு, அறிவிக்கப்படாத மின்வெட்டு , உள்ளூர் மின்வெட்டு, விவசாயத்துக்கு மின்வெட்டு, இது போக சின்ன தூறல் போட்டால் கூட அந்த சாக்கில் ஒரு மின்வெட்டு என பல வகையான மின்வெட்டுக்கள் இரவையும், பகலையும் சீர் குலைத்தன.
ஒரு விவசாயி எப்போது மழை வரும் என வானத்தையே முறைத்து பார்த்துக் கொண்டிருபதைப் போல , மின்சாரம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் நாளெல்லாம் தவம் கிடந்தார்கள். திருமண மண்டபங்களில் தாலி கட்டும் நேரத்தில் பல சமயங்களில் மின்சாரம் போய் மண்டபமே இருண்டுவிடும் என்ற நிலை இருந்தது. இந்தியாவில் 18 ஆயிரம் கிராமங்களிலும், 65 லட்சம் வீடுகளிலும் மின் இணைப்பு கிடைக்காததால், இருளில் மூழ்கி கிடந்தன. தமிழகத்தில் இன்னும் 200 கிராமங்களில் மின் இணைப்பே வழங்கப்படவில்லை, அந்த மக்கள் மின்சாரத்தையே இது வரை பயன்படுத்தியதில்லை என்ற புகார் எல்லாம் அப்போது சட்டசபையில் தெரிவிக்கப்பட்டன.
2011 ஆம் ஆண்டு திமுக அரசு திறமையற்ற அரசு என தூக்கி எறியப்பட்டதற்கு காரணமும் இந்த மின்வெட்டுதான் காரணம் என கூறப்பட்டது. அப்போது இந்திய மக்களில் 62 கோடி பேர் இருளில் மூழ்கினார்கள். அந்த இருள் நாட்டையும் சூழ்ந்தது. 24 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் நிலக்கரி, எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் கிடைக்காமல் இயங்காமல் கிடந்தன. செயல்படாமை என்ற தீய வளையத்தில் ஒட்டு மொத்த தேசத்தின் மொத்த மின்துறையும் சிக்கி இருந்தது.
கிட்டத்தட்ட நரேந்திர மோடி அவர்கள் 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும் வரை இந்த நிலைதான் நாடு முழுவதும் பரவலாக இருந்தது. மோடி அவர்களின் ஆட்சி கடந்த 6 ஆண்டுகளாக நடைபெறுகிறது. அவர் ஆட்சிப்பொறுப்பேற்ற அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மின்வெட்டு இந்த நாட்டை விட்டே ஓடிப் போய்விட்டது. இப்போது மத்திய அரசின் கைகளில் மட்டுமல்ல பல மாநிலங்களில் கைகளில் மிகை மின்சாரம் உள்ளது. இந்த அதிசயம் அவர் வந்த சில ஆண்டுகளில் எப்படி ஏற்பட்டது.
60 ஆண்டுகளில் அவர்களால் முடியாததை மோடி அரசால் மட்டும் எப்படி சாதிக்க முடிந்தது ?
இதற்கு முதல் காரணம் பிரதமர் நரேந்திர மோடிதான். தான் ஆண்ட குஜராத்தை அத்தனை ஆண்டுகளிலும் மின்செழிப்புள்ள மாநிலமாக அவர் வைத்திருந்தார். மத்திய தொகுப்புக்கும், மற்ற மாநிலங்களுக்கும் குஜராத் மின்சாரத்தை வழங்கக் கூடிய அளவுக்கு அவர் ஒரு மிகப்பெரிய நிலையான சாதனையை செய்திருந்தார்.
அதே மாடலையே அவர் பிரதமராக வந்ததும் பின்பற்றினார். அந்த அனுபவம்தான் இந்தியா ஒரு இருள் இல்லாத நாடாக மாறியதற்கு காரணமாகும். நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 80 சதவீதம் நிலக்கரியை பயன்படுத்தி அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டன. இதற்கான நிலக்கரியை சப்ளை செய்தவர்கள் அனைவரும் ஆளும் அரசியல்வாதிகளாகவும், அவர்கள் பின்னால் உள்ளவர்கள் என கண்டுபிடித்தார் மோடி.
தமிழகத்தில் உள்ள பல மூத்த திமுக மந்திரிகள் உட்பட காங்கிரஸ் மேலிடத்துக்கு வேண்டப்பட்ட இவர்கள் இந்தோனேசியா, மலேசியா போன்ற வெளிநாடுகளில் நிலக்கரி சுரங்க அனுமதி பெற்று அங்கிருந்து தரமில்லாத ஈர நிலக்கரியை இந்தியாவுக்கு அனுப்பி பல இலட்சம் கோடி கொள்ளை அடிப்பதை கண்டு பிடித்தார்.
இவர்கள்தான் செயற்கையான மின் பற்றாக்குறை ஏற்படுத்துவதையும் கண்டுபிடித்தார். இந்நிலையில் முறைகேடுகளுக்கு காரணமாக இருந்த 214 நிலக்கரி சுரங்கங்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தை அணுகினார். அந்த 214 நிலக்கரி சுரங்கங்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை தீர விசாரித்து உச்ச நீதிமன்றம் நீக்கியது. பிரதமர் மோடி எடுத்த இந்த முதல் நடவடிக்கைதான் ஊழல் விவகாரத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கிய நடவடிக்கையாகும்.
இந்த நடவடிக்கைக்குப் பின் நிலக்கரி சுரங்க ஊழல்களை ஒழிக்கும் வகையில் திறந்தவெளி முறையில் ஈ. ஒப்பந்தமுறை கடைபிடிக்கப்பட்டு, தரமான நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, தரமான முறைகளில் அது அனல்மின் நிலையங்களுக்கு சப்ளை செய்யப்பட்டது. இதன்மூலம் கூடுதலாக 22 ஆயிரத்து 566 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக 2015 ஆம் ஆண்டில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட 50 சதவீத மின்வெட்டு நாடு முழுவதும் குறைந்தது.
மேலும் மின்சாரத்தை மின் தொகுப்புகளிலிருந்து எடுத்து செல்லும் மின் கோபுரங்கள் கடந்த ஆட்சி காலங்களில் தேவைக்கு ஏற்றவாறு புதிதாக அமைக்கப்படவில்லை. மேலும் அனைத்தும் காலாவதியாகி பழுதாக கிடந்தன. பல மாநிலங்கள் வலியுறுத்தியும் மன்மோகன் அரசு இதை காதில்போட்டுக் கொள்ளவில்லை. இதனால் அப்போது குஜராத்தில் இருந்து தமிழகத்துக்கு மின்சாரம் கொண்டு வரமுடியவில்லை என்று ஜெயலலிதாவே குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் மோடி அரசுப் பொறுப்பு ஏற்றதுமே 'ஒரு தேசம் ஒரு மின் தொகுப்பு' என்ற இலட்சியத்தின்படி 80 ஆயிரம் கோடி செலவில் மின்தொகுப்புக்கு வந்து செல்லும் அனைத்து மின்கோபுரங்கள் மற்றும் உபகரணங்கள் செப்பநிடப்பட்டு அனைத்தும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவரப்பட்டன. அதன் பிறகு தென் மாநிலங்களில் மின்வெட்டு பெருமளவில் குறைக்கப்பட்டது. மேலும் தமிழகம் பிறமாநிலங்களில் இருந்து மின்சாரம் பெறும் வசதிகள் அதிகரித்தன.
தனியார் காற்றாலைகள் மற்றும் நீர் மின் உற்பத்தி நிலையங்கள், சூரிய மின்சக்தி ஆலைகள் தயாரிக்கும் மின்சாரம் எளிதாக பொது தொகுப்புக்கு வரும் மின்பாதை ஏற்பட்டது. இது பிரதமர் மோடி செய்த 2 வது மிகப்பெரிய சீர்திருத்தமாகும். இதனால் தனியார் மின் ஆலைகளின் மின்சாரம் கொண்டு செல்லும் பிரச்சினை தீர்ந்தது. மேலும் பல தனியார் மின் ஆலைகள் தொழிலில் ஆரவமுடன் ஈடுபட முன்வந்தன. இதன் மூலம் மேலும் 2௦ சதவீத மின்வெட்டு குறைந்தது.
மேலும் மின் மதிப்புத் தட சங்கிலியில் பலவீனமான இணைப்பு பிரச்சினைக்குத் தீர்வு காண உதய் திட்டம் கொண்டுவரப்பட்டது.. அதன்மூலம் இந்த துறையில் உள்ள பிரச்சினைகளை முந்தைய, இந்நாள் , எதிர்கால பிரச்சினை என வகுக்கப்பட்டு தீர்வு ஏற்பட்டு வருகின்றன.
மாநில முதல்வர்கள், வங்கிகளுடனும், கட்டுப்பாட்டாளர்களுடனும் கலந்துபேசி உருவாக்கப்பட்ட திட்டம் சவுபாக்கியா திட்டம். இத்திட்டம் மின் விநியோகத்தில் மின் விநியோக துறை நிறுவனங்களான டிஸ்காமுக்கு நீடித்த மின்சாரம் வருவதற்கான பாதைக்கு வழி ஏற்படுத்தி உள்ளது. இதனாலும், சூரிய சக்தி உட்பட மாற்று சக்திகளுக்கு வழி காணப்பட்டதாலும் இன்று மின்வெட்டு என்ற பேச்சுக்கே பெரும்பாலும் இடமில்லாமல் போய்விட்டது. மத்திய அரசும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் போதுமான அளவில் மின்சாரம் மீதமாக உள்ளன. அந்த மாநிலங்களில் மின்வாரியங்கள் சிறப்புடன் ஊழலில்லாமல் செயல்படுகின்றன.
இந்நிலையில் மின்சார கட்டணத்தினையும் குறைப்பதற்கு மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனாலும் இன்னும் சில மாநிலங்களில் மின்வாரியங்கள் ஊழலின் ஊற்றுக்கண்ணாய் உள்ளன. இதனால் 100 சதவீத மின்வெட்டு ஒழிப்புக்கு சில தடங்கல்கள் உள்ளன. எப்படியோ பிரதமர் மோடி கொண்டுவந்த இந்த மின் சீர்திருத்த திட்டங்களால் இந்தியா எப்போதும் இல்லாத அளவில் ஒளிர்கிறது.
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் மின்சாரத்தையே பார்க்காத தமிழகத்தின் 200 கிராமங்கள் உட்பட 18 ஆயிரம் கிராமங்களில் இந்த வெளிச்சத்தின் பிரகாசத்தில் மக்களின் புன்னகை தெரிகிறது, இதுதான் மோடி கால இந்தியா என உலகமே பாராட்டுகிறது.
