ஜே.இ.இ தேர்வுகளை மாநில மொழிகளிலும் நடத்த முடிவெடுக்க காரணம் மோடி?
ஜே.இ.இ தேர்வுகளை மாநில மொழிகளிலும் நடத்த முடிவெடுக்க காரணம் மோடி?

By : Kathir Webdesk
தாய்மொழியில் தேர்வெழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மேற்கோள் காட்டியதால்தான் ஜே.இ.இ தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த முடிவெடுத்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் கூறியுள்ளார். நாடு முழுவதிலும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ நுழைவுத்தேர்வு அவசியம் ஆகும்.
இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, ஐஐடி, என்.ஐ.டி, ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர முடியும். ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்தத் தேர்வுகள் இதுவரை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜே.இ.இ முதன்மை மற்றும் அட்வான்ஸ் தேர்வுகள் இனி பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " அந்தந்த மாநில மொழிகளில் ஜே.இ.இ மெயின் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச மாணவர் மதிப்பீட்டிற்கான திட்டத்தின் கீழ் தாய்மொழியில் தேர்வெழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி மேற்கோள் காட்டியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியும்" என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்ற பல மாணவர்களும் கூட, மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் சேர்ந்து பயிலும் வாய்ப்பு சுலபமாகியுள்ளது.
இது குறித்து தமிழக கல்வியாளர்கள் கூறுகையில் " இது தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையாகும், இதை இதற்கு முன் இருந்த அரசுகள் செய்ததில்லை. ஏற்கனவே நீட் தேர்வை மாநில மொழிகளில் எழுதலாம் என மோடி அவர்களின் அரசு அனுமதித்ததால் இப்போது நீட் தேர்வில் தேசீய அளவில் கிராமப்புற மாணவர்கள் அதிகம் வெற்றி பெறுகின்றனர். தமிழகத்திலும் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தாய்மொழியின் அவசியத்தை புரிந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அரசு எடுத்த இந்த முடிவு அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கும் பயனளிக்கும் என்றனர்.
