'தடுப்பூசி இலவசம் என்று வாக்குறுதி சரியானது'- எதிர்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த மத்திய நிதி மந்திரி.!
'தடுப்பூசி இலவசம் என்று வாக்குறுதி சரியானது'- எதிர்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த மத்திய நிதி மந்திரி.!

By : Kathir Webdesk
பீகாரில் வருகிற 28-ந் தேதி தொடங்கி 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி இந்த தேர்தலில் களம் காணும் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. கடந்த வியாழக்கிழமை பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதி மந்திரி வெளியிட்டார்.
அதில் முக்கியமான ஒரு அம்சம் என்னவென்றால், பீகாரில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு மீண்டும் வந்தால் மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் உடனே அரிசி அதிக கொள்முதல் செய்து மக்களுக்கு இலவசமாக வழங்கும் என்றும் பா.ஜ.க தரப்பில் இந்த வாக்குறுதி தரப்பட்டுள்ளது.
இந்த வாக்குறுதியானது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவுக்கான தடுப்பூசி இலவசம் என்பதை தேர்தல் வாக்குறுதியாக கொடுப்பது அபத்தமானது மற்றும் நியாயமற்ற செயல் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. பல்வேறு தரப்புகளில் இருந்தும் இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 'கொரோனா தடுப்பூசி இலவசம் என்கிற பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி சரியானதுதான்' என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் இதுபற்றி அவர் கூறுகையில், "இது ஒரு தேர்தல் அறிக்கையில் உள்ள அறிவிப்பு. ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது என்ன செய்ய விரும்புகிறது என்பதை அதில் அறிவிக்க முடியும். அதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாக்குறுதி சரியானதுதான்" என்று கூறினார்.
