உத்திர பிரதேச ராஜ்ய சபா தேர்தலில் ஏற்படும் புது கூட்டணி? இந்திய அரசியலை மாற்றி அமைக்குமா?
உத்திர பிரதேச ராஜ்ய சபா தேர்தலில் ஏற்படும் புது கூட்டணி? இந்திய அரசியலை மாற்றி அமைக்குமா?

உத்திர பிரதேச மாநிலத்தில் இந்த மாதம் பத்து ராஜ்ய சபா இடங்கள் காலியாகின்றன. இதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகி, நாளை மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவிக்காலாவதியாகும் 10 இடங்களில் 3 எம்.பி-க்கள் மட்டுமே பா.ஜ.க வசம் இருக்கிறது. ஆனால், 2017-ஆம் ஆண்டு உத்திர பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் 325 எம்.எல்.ஏ-க்களை வென்று அசுர பலத்தில் பா.ஜ.க வென்றதால் காலியாகும் 10 இடங்களில் 8 இடங்களை தற்போது எளிதாக வெல்ல முடியும்.
ஒன்பதாவது இடத்திற்கு முட்டி மோதினால் ஜெயிக்க முடியும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில், நேற்று பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. ஒன்பது இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 8 பெயர்களே வெளியாகி உள்ளது.
இந்நிலையில் உத்திர பிரதேச சட்டசபையில் 404 இடங்களில் வெறும் 18 எம்.எல்.ஏ-க்களை பெற்றுள்ள மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எதிர்பார்க்காத நிலையில் ஒரு வேட்பாளரை களம் இறக்கி உள்ளது. அந்த வேட்பாளர் மாயாவதிக்கு நெருக்கமான பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் ராம்ஜி கெளதம்.
ராஜ்ய சபா தேர்தலில் வெல்ல 39 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு வேண்டும் என்ற நிலையில் வெறும் 18 எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு தைரியமாக மாயாவதி களமாடுவதற்கு பின் பா.ஜ.க - பகுஜன் சமாஜ் கூட்டணி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
இந்த கூட்டணி 2022 உத்திர பிரதேச சட்டசபை தேர்தல் மற்றும் பின்வரும் தேர்தல்களிலும் தொடர்ந்தால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய சக்திவாய்ந்த கூட்டணியாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.