நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் களையிழந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள்.!
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் களையிழந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள்.!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இரவு நேரம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்து காணப்பட்டது.
இங்கிலாந்தில் புதிதாக பரவியுள்ள உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரிய அளவில் மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக டெல்லி அரசு, டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியிருந்தது.
மும்பையில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்டுகள், கேளிக்கை விடுதிகள், பார்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
கர்நாடகா தலைநகரான பெங்களூருவில் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும். இதில் குறிப்பாக எம்.ஜி.ரோடு, பிரிக்கேட் ரோடு பகுதிகளில் விடிய, விடிய இளைஞர்கள், பெண்கள் என புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெங்களூருவில் வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை (புத்தாண்டு அன்று) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விடுதிகள், பார்கள், உணவகங்களில் முன்கூட்டியே முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதே போன்று சென்னையிலும் இரவு 10 மணிக்கு மேல் அனைத்து நட்சத்திர ஓட்டல்கள், ரிசார்டுகள், கேளிக்கை விடுதிகள், பார்கள் என அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று காவல் துறை உத்தரவிட்டது.
அதன்படி அனைத்தும் மூடப்பட்டிருந்தது. போலீசாரின் தடை உத்தரவை மீறி யாரேனும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தால் சம்பந்தபட்ட ஓட்டல் மற்றும் ரிசார்கள் உரிமம் ரத்து செய்யவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதற்காக காவல் துறை சார்பில் கடற்கரை பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளும் வைத்துள்ளனர்.
தடையை மீறி கடற்கரைக்கு வரும் பொதுமக்களை கண்காணிக்க குதிரைப்படை, ஆயுதப்படை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சாலைகளில் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாடவும் தடை விதித்துள்ளார்கள்.
இந்த உத்தரவு காரணமாக பல நகரங்களில் புத்தாண்டு கழை இழந்து காணப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் வீடுகளில் இருந்தே மற்றவர்களுடன் தங்களது மகிழ்ச்சியை வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.