கொரோனா அதிகரிப்பு: அரசு, தனியார் அலுவலகங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்.!
உயிரிழப்புகளும் அதிகரிக்கும் சூழல் உருவாகியிருப்பதால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் துரித நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

நாடு முழுவதும் கொரோன வைரஸ் தொற்றின் 2ம் அலை பரவத் தொடங்கியுள்ளது. இதனால் தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்த மத்திய சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது. அதன்படி 100 பணியாளர்கள் இருந்தால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஏப்ரல் 11ம் தேதி முதல் தடுப்பூசி முகாம் நடத்தலாம் என்றும், வயது வரம்பில் எந்த மாற்றமும் இல்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.28 கோடி பேரை எட்டியுள்ளது. தினமும் ஒரு லட்சத்தை மீண்டும் கடந்து வருகிறது.
உயிரிழப்புகளும் அதிகரிக்கும் சூழல் உருவாகியிருப்பதால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் துரித நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தேர்தல் காலம் இருந்தாலும் தடுப்பூசி போடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்றின் 2ம் அலை தீவிரமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதன் மூலம் பல லட்சம் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.