கர்நாடகாவில் கொரோனா 3வது அலை இரண்டு மாதத்தில் துவங்கும்.. அமைச்சர் ஆர்.அசோக் பேட்டி.!
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகள் நலப்பிரிவு தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்காலிகமாக குழந்தைகளுக்காக மருத்துவமனை தொடங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

By : Thangavelu
கர்நாட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக், தொட்டபள்ளாபுராவில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
கர்நாடகாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநிலங்களில் கொரோனா 3வது அலை இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குழந்தைகளுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்கு வசதியாக அனைத்து பிரிவு மருத்துவர்களுக்கும் உரிய பயிற்சி அளிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகள் நலப்பிரிவு தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்காலிகமாக குழந்தைகளுக்காக மருத்துவமனை தொடங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளனர். அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இல்லை என்றால் 3வது அலையை நம்மால் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
