DRDO தயாரித்த 2DG மருந்தின் வணிக ரீதியான விற்பனை தொடக்கம் : Dr. Reddys நிறுவனம்!
By : Parthasarathy
கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவில் கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் மக்களை கொரோனா நோய்த்தொற்றிலிருந்து காத்துக்கொள்ள 2DG என்ற மருந்தை DRDO தயாரித்து உள்ளது. DRDO வின் அணு மருத்துவம் மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர்.ரெட்டிஸ் ஆய்வகமும் இணைந்து இந்த 2DG மருந்தை உருவாக்கி உள்ளது.
பவுடர் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த 2DG மருந்தை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். கடந்த மே மாதம் 17 ஆம் தேதி ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ வரதன் இணைந்து இந்த 2DG மருந்தை தொடங்கி வைத்தனர். DRDO அறிமுக படுத்திய 2DG கொரோனா சிகிச்சை மருந்தை கோவிட் - 19 நோயாளிகளுக்கு மருத்துவர்களின் பரிந்துரைப்படி பயன்படுத்த DCGI ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை அடுத்து DRDO இந்த 2DG மருந்தின் பயன்பாட்டிற்கான வழிகாட்டு முறைகளையும் வெளியிட்டது.
இவ்வாறு இருக்கையில் இந்த 2DG மருந்தின் வணிக ரீதியான விற்பனையை தொடங்குவதாக டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் பெரிய அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2DG மருந்துகள் கிடைக்கும் என கூறப்பட்டு உள்ளது. இந்த மருந்து விற்பனை தொடங்கப்பட்ட வாரங்களில் இந்தியாவின் பெருநகரங்கள் மற்றும் முதல் அடுக்கு நகரங்களில் மட்டுமே கிடைக்கும் எனவும், பின்னர் இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் அந்த ஆய்வகம் குறிப்பிட்டு இருக்கிறது. இந்த 2DG மருந்து பாக்கெட் ஒன்றின் அதிகபட்ச விலை 990 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் அரசு நிறுவனங்களுக்கு மானிய விகிதத்துடன் வழங்கப்படுகிறது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள மிதமான மற்றும் தீவிர பாதிப்பு கொண்ட நோயாளிகளுக்கு, மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் மட்டுமே இந்த மருந்து வழங்கப்படும் எனவும் மேலும் DRDO வெளியிட்டுள்ள, 2DG மருந்தின் பயன்பாட்டிற்கான வழிகாட்டு முறைகளின் அடிப்படையில் மட்டுமே இது பயன்படுத்தபடும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.