ட்ரோன் மூலம் ரத்தம் விநியோகம்.. சோதனை வெற்றி.. நிறைவேறும் பிரதமரின் தொலைநோக்கு திட்டம்..
ட்ரோன் மூலம் ரத்தம் விநியோகம் செய்யும் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
By : Bharathi Latha
இந்தியாவில் ட்ரோன் பயன்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கத்தின் தொடர்ச்சியாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஐட்ரோன் முன்னெடுப்பின் கீழ் ட்ரோன்கள் மூலம் ரத்தம் விநியோகம் செய்வதன் சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தொடக்க சோதனையின்போது, ஜி.ஐ.எம்.எஸ் மற்றும் எல்.ஹெச்.எம்.சி-யிலிருந்து 10 யூனிட் ரத்தம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்தியாவில் ட்ரோன் பயன்பாட்டை விரிவுபடுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையானது விவசாயம், பாதுகாப்பு, பேரிடர் நிவாரணம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் ஆளில்லா விமானங்களின் பயன்பாட்டிற்கான அடித்தளத்தை வழங்கியுள்ளது.
ட்ரோன் விதிகள் 2022-ல் செய்யப்பட்ட தளர்வுகள், இந்தத் துறைகளில் புதிய தொழில்நுட்பங்களைச் சேர்ப்பதை ஆராய்ச்சியாளர்களுக்கு எளிதாக்கியுள்ளது. சுகாதார நோக்கங்களுக்காக ட்ரோன்களைப் பயன்படுத்துவதில் ஐசிஎம்ஆர் முன்னோடியாக உள்ளது. மணிப்பூர் மற்றும் நாகாலாந்தின் தொலைதூரப் பகுதிகளில் மருத்துவப் பொருட்கள், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை ட்ரோன்கள் மூலம் வெற்றிகரமாக விநியோகித்துள்ளது. ட்ரோன் அடிப்படையிலான ரத்த விநியோகம் நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு விநியோக நேரத்தைக் குறைக்கும். இந்த சோதனைக்குப் பிறகு, வெப்பநிலையை பராமரிப்பது மட்டுமல்லாமல், கொண்டு செல்லப்பட்ட பொருட்களுக்கு எந்த சேதமும் இல்லை என்பதைக் கண்டறிந்ததாக ICMR இயக்குநர் டாக்டர் ராஜீவ் பாஹல் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் எண்ணப்படி வளர்ந்த நாடு என்ற நிலையை இந்தியா அடைவதற்கு இந்தத் தொழில்நுட்பம் உதவும் எனவும் அவர் கூறினார். இந்த சோதனையின்போது, தொலைதூரப் பகுதிகள் மற்றும் இந்தியாவின் நெரிசல் மிகுந்த பெருநகரங்களில் ரத்தம் மற்றும் ரத்தம் தொடர்பான பொருட்களை சரியான நேரத்தில் வழங்குவதில் உள்ள சவால்களை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ட்ரோனின் இயக்கத்தினால் ரத்தம் போன்ற உடல் திரவங்களின் தரத்தையும் விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்தனர்.
Input & Image courtesy: News