மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாரான விவசாயிகள்.. டெல்லி போராட்டம் முடிவுக்கு வருமா.?
மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாரான விவசாயிகள்.. டெல்லி போராட்டம் முடிவுக்கு வருமா.?

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாய அமைப்புகள் சிலர் கடந்த 3 வாரங்களாக முகாமிட்டுள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 சுற்று பேச்சுவார்த்தைகள் எந்தவித பலனையும் தரவில்லை. எனினும் வேளாண் சட்ட பிரச்சினையில் சுமுக முடிவு காண்பதில் உறுதியாக இருக்கும் மத்திய அரசு, விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்றும், அது குறித்து பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வேண்டும் எனவும் கூறி வரும் விவசாயிகள், அவ்வாறு உறுதியளித்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்திருந்தனர்.
நேற்று 40 விவசாய அமைப்புகள் இணைந்த கூட்டு அமைப்பான சன்யுக்த் கிசான் மோர்ச்சாவின் நிர்வாகிகள் மத்தியில் ஆலோசனை நடத்தினர். ஆனால் முடிவு எட்டப்படவில்லை, இதனால் மீண்டும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையை தொடர்வது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மத்திய வேளாண் துறை செயலாளர் விவேக் அகர்வாலுக்கு விவசாயிகள் கடிதம் அனுப்பினர். அதில், ‘மத்திய அரசு மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இடையிலான பேச்சுவார்த்தையை 29-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு வைத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டு இருந்தனர். இதனால் வருகின்ற செவ்வாய்கிழமை விவசாயிகள் பிரச்சனைக்கு சுமுக உடன்பாடு எட்டப்பட்டு வீடுகளுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கலாம்.