மத்திய அரசின் அதிரடி திட்டம்! 8 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்க முடிவு!
மத்திய அரசின் அதிரடி திட்டம்! 8 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்க முடிவு!
By : Muruganandham M
எப்.சி சான்றிதழ் புதுப்பிக்கப்படும் போது எட்டு வயதுக்கு மேற்பட்ட வாகனங்கள் மீது “பசுமை வரி” வசூலிக்கும் திட்டத்திற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தார். முறையாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவர்களின் கருத்துக்களுக்காக இந்த திட்டம் அனுப்பப்படும்.
வரி மூலம் வசூலிக்கப்படும் வருவாய் மாசுபாட்டை சமாளிக்க பயன்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
15 ஆண்டுகளுக்கும் மேலான அரசுத் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனத்திற்கு சொந்தமான வாகனங்களை பதிவுசெய்தல் மற்றும் அகற்றும் கொள்கைக்கு கட்கரி ஒப்புதல் அளித்தார். இது அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும்.
'பசுமை வரி' விதிக்கும்போது பின்பற்ற வேண்டிய முக்கிய கொள்கைகள் அறிவிப்பில் அடங்கும்; எட்டு வயதிற்கு மேற்பட்ட போக்குவரத்து வாகனங்கள் சாலை வரியின் 10 முதல் 25 சதவீதம் என்ற விகிதத்தில், பதிவு சான்றிதழ் (ஆர்.சி. ) மற்றும் எப்.சி சான்றிதழ் புதுப்பிக்கப்படும் போது வசூலிக்கப்படலாம்.15 ஆண்டுகளை கடந்த நகரப் பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கும் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும்.
அதிக மாசுபட்ட நகரங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு அதிக வரி விதிக்க (சாலை வரியின் 50 சதவீதம்) அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
"எரிபொருள் (பெட்ரோல் / டீசல்) மற்றும் வாகன வகையைப் பொறுத்து வேறுபட்ட வரி; மின்சார வாகனங்கள் மற்றும் சி.என்.ஜி, எத்தனால், எல்பிஜி போன்ற மாற்று எரிபொருள்கள் போன்ற வாகனங்கள் விலக்கு அளிக்கப்பட வேண்டும் ”என்று அமைச்சகம் குறிப்பிட்டது.
டிராக்டர், அறுவடை, உழவர் போன்ற விவசாயத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்படும். 'பசுமை வரியிலிருந்து' வசூலிக்கப்படும் வருவாய் ஒரு தனி கணக்கில் வைக்கப்பட்டு மாசுபாட்டைக் கையாள்வதற்கும், மாநிலங்கள் உமிழ்வு கண்காணிப்புக்கு அதிநவீன வசதிகளை அமைப்பதற்கும் பயன்படுத்தப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.